"அதிமுகவின் தோல்விக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று அடம்பிடித்தவர்களே காரணம்"- ஓபிஎஸ்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வாரியம் வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “சூது, சூழ்ச்சி, வஞ்சனை, நம்பிக்கை துரோகம். துரோகத்தினால் கடைசியாக நடைபெற்ற 11 தேர்தல்களிலும் ஊரக உள்ளாட்சியாக இருந்தாலும் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல் அனைத்திலும் தோல்வி பெற ஒற்றைத் தலைமை தான் வேண்டுமென்று அடம்பிடித்தது தான் காரணம். மனசாட்சி இல்லாமல் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம். எங்கள் வாய் நல்ல வாய் அவர்கள் வாய் என்ன வாய்? என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
தமிழக மக்கள் இரு மொழி கொள்கையை தான் விரும்புகிறார்கள் என்பதை அறிந்து அண்ணாவும், எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள் . ஆண் முதலமைச்சராக இருந்தபோதும் அதைத்தான் பின்பற்றினேன். அதேபோல் எங்களுடைய நிலைப்பாடும் இரு மொழிக் கொள்கைதான். தமிழகத்தில் பிறக்கிற ஒவ்வொரு குழந்தைகளும் பிறந்தவுடனே தமிழ் மொழியில் தான் அம்மா என அழைக்கிறார்கள், தாய் மொழி தமிழ், விருப்பப்பட்டவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம் படித்துக் கொள்ளலாம் என அண்ணா கூறியுள்ளார். தாய் மொழியை காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழர்களுக்கும் உள்ளது. தாய்மொழி தமிழ், விருப்பப்பட்டவர்கள் எந்த மொழி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்” என்றார்.