‘நான் சொன்னா அரசியல் நாகரீகமாக இருக்காது’- ஆர்.பி.உதயகுமாருக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை

பிரிந்த காரணத்தினால்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக 11 முறை தோல்வியைக் கண்டதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “ பழனிசாமி தலைமையில் அதிமுக 11 முறை தோல்வியைக் கண்டது. அதிமுகவில் பிரிந்து கிடக்கின்ற அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். ஆர்.பி.உதயகுமார் அதிமுகவில் என்ன நிலையில் இருந்தார் என்று நான் கூறினால் அரசியல் நாகரீகமாக இருக்காது. என்னை பற்றியோ, என் குடும்பத்தை பற்றியோ பேசுவதை உதயகுமார் நிறுத்திக் கொள்ள வேண்டும். உதயகுமார் எப்படிப்பட்டவர் என்பது மதுரையில் இருப்பவர்களுக்கு தெரியும், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்ததற்கு முழு காரணகர்த்தா அவர்தான். விசுவாசத்தை பொறுத்தவரை ஜெயலலிதா எனக்கு நற்சான்றிதழ் கொடுத்துள்ளார். அதிமுகவில் பிரச்சனையை யார் உருவாக்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆறு மாதம் அமைதியாக இருந்தால் அதிமுகவில் இணைய பரிசீலிப்போம் என ராஜன் செல்லப்பா கூறுகிறார். என்னை அழைத்துக் கொண்டு பொய் சேர்க்க வேண்டும் என சொல்லவில்லை. எனக்காக அவர் சிபாரிசு செய்கிறார் என்று சொல்கிறார், எனக்காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை.. பிரிந்து கிடக்கின்ற அதிமுகவை இணைந்து செயல்பட்டால் தான் இனிவரும் காலங்களில் எந்த தேர்தல் வந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கின்ற சக்தி உருவாக்க வேண்டும் என்றுதான் சொல் கொண்டிருக்கிறேன். என் மகனுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்க சொன்னதே ஜெயலலிதா தான்.
இருமொழிக் கொள்கையையே அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பின்பற்றி வந்தனர். இரு மொழிக் கொள்கையையே தமிழக மக்கள் உயிர் மூச்சாக கொண்டுள்ளனர். மும்மொழி கொள்கையை பின்பற்றினால் தான் நிதி ஒதுக்கீடு என்ற முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. அதிமுக ஒன்றிணைந்தால்தான் திமுகவை எதிர்த்து போராடும் சக்தி கிடைக்கும்” என்றார்.