சினிமா பைரசிக்கு முடிவுக்கட்ட சட்டம் இயற்றுக- தம்பிதுரை எம்பி
சினிமா பைரசியை ஒழிக்க மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். அதற்கான சட்டத்திருத்தம் ஒன்றை மத்திய அரசு கொண்டுவந்தால், அதை நாங்கள் வரவேற்போம் என அதிமுக மாநிலங்களவை குழு தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்தச் சட்ட மசோதா தொடர்பான விவாதத்தின் போது பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை, "ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். முதலில் நானும் திரைத்துறையில் இருந்தேன் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். சில படங்களை தயாரித்துள்ளேன். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை விநியோகித்தும் இருக்கிறேன். சினிமா பைரசி என்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதனால் பல தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். சில காலம் அவர்கள் பேசப்படுகிறார்கள், பின்னர் சரிவை சந்திக்கிறார்கள். ஹீரோக்களும் அதேமாதிரியான நிலையை தான் சந்திக்கிறார்கள். திரைத்துறையே அப்படி தான் இருக்கிறது. ஆனால் மக்களை சந்தோஷப்படுத்த இதையெல்லாம் தாங்கிக்கொண்டு தான் அனைவரும் திரைத்துறையில் பயணிக்கிறார்கள். திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்கு மட்டுமல்லாது, சமூக அக்கறையை புகட்டுவதோடு, சமூக பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் சொல்கின்றன.
குடும்ப பிரச்சனைகளுக்கான தீர்வுகளை திரைப்படங்கள் கற்றுத்தருகின்றன. சுதந்திரம் வாங்கும் காலத்தில் பெரும்பாலான படங்கள் நாட்டுப்பற்றை எடுத்துக்காட்டும் வண்ணம் வெளிவந்தன. பேரறிஞர் அண்ணா ராஜ்யசபை உறுப்பினராக இருந்தவர். அவரும் பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். அதேபோல என்னுடைய தலைவர் எம்.ஜி.ஆர், மிகச்சிறந்த நடிகர். எங்கள் தலைவி செல்வி.ஜெயலலிதாவும் நடிகையாக இருந்து வந்தவர் தான். திரைப்படங்கள் மூலமாக தான் அரசியல் முதல் சமூக பிரச்சனைகள் வரை எல்லாமே மக்களை முன்பு சென்றடைந்தன. அன்றைக்கு இன்று இருப்பது போல ஆயிரக்கணக்கான ஊடகங்கள் இல்லை. ஆனால் இன்று நிலைமை வேறாக இருக்கிறது.

எல்லா படத்திலும் வன்முறைக் காட்சிகள் இடம்பெறுகின்றன. எல்லா படங்களிலும் அடிதடி, வெட்டுக்குத்து, ஹீரோ தாதாவாகிறார் பின்னர் போலீஸ் அதிகாரியாகிறார், மக்களை கொலை செய்கிறார் என்று இப்படி தான் படங்கள் இன்று வந்துக்கொண்டு இருக்கின்றன. இது மக்களின் மனநிலையை பாதிக்கும். சினிமா பைரசிக்கு ஒரு முடிவு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். அதற்காக ஏதேனும் சட்ட திருத்தம் கொண்டுவந்தால், அதை நிச்சயம் நாங்கள் வரவேற்போம்" என்று தெரிவித்தார்.


