அண்ணா பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் - அதிமுகவினர் கைது!
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அண்ணா பல்கலைக்கழக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாணவர் அணியினர் கைது செய்யப்பட்டனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணையின்போது சார் எனக்கூறி ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி மீண்டும் உறுதி செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அண்ணா பல்கலைக்கழக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாணவர் அணியினர் கைது செய்யப்பட்டனர். அண்ணா பல்கலைக்கழக வளாகம் வெளியே போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.