அதிமுக கூட்டத்தில் மோதல்- பழனிசாமியின் நெருங்கிய உறவினரே காரணம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் மோதல் ஏற்பட்டதற்கு, எடப்பாடி உறவினரின் தூண்டுதல் காரணமா என அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையத்தில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதில்லை உரிய மரியாதை தருவதில்லை என அந்தியூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி பிரவீன் எழுப்பிய கேள்வி கூட்டத்தில் அடிதடியில் முடிந்தது. செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பிரவீனை தாக்கி வெளியேற்றினர்.
இந்நிலையில், செங்கோட்டையன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு இந்த நாடகத்தை நடத்தி இருப்பதாக அதிமுகவினர் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். குறைகள் இருந்தால் மாவட்ட செயலாளரிடம் கூறாமல் கத்தி கூச்சலிட்டு பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறார். யாரோ ஒருவர் சொல்லி இதை அவர் செயல்படுத்தி இருக்கிறார் என பதிவிட்டுள்ள அதிமுகவினர் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். அதில் அதிமுக நிர்வாகி பிரவீன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் மிக நெருங்கிய உறவினர் சசி பிரபு ஆகியோரின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். அதிமுகவில் மாநில நிர்வாகிகள் இருவரை செங்கோட்டையனுக்கு தெரியாமல் சசி பிரபு பரிந்துரையின் பேரில் எடப்பாடி பழனிச்சாமி நியமித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் உள்ளார். இந்த நிலையில் எடப்பாடியின் மிக நெருங்கிய உறவினர் சசி பிரபு மற்றும் அதிமுக நிர்வாகி பிரவீன் ஆகியோர் இணைந்துள்ள புகைப்படத்துடன் இன்றைய மோதலுக்கு யார் தூண்டுதல் என்பது தெரிய வந்துள்ளதாக அதிமுக செங்கோட்டையன் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.