விஷம் குடித்துச் செத்தாலும் சாவோம்; எடப்பாடி பக்கம் போகமாட்டோம்- மருது அழகுராஜ்

விஷம் குடித்து செத்தாலும் சாவோம், மன்னிப்பு கடிதம் கொடுத்து எடப்பாடி பழனிச்சாமி பக்கம் செல்ல மாட்டோம் என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகுராஜ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "எடப்பாடி பழனிச்சாமி குறித்து யாரும் பேசக்கூடாது என நீதிமன்றத்தில் ஒரு டஜன் தீர்ப்புகள் வாங்கி வைத்துள்ளார், எம்.ஜி.ஆர் எழுதி வைத்த ஒரு விதியை எடப்பாடி பழனிச்சாமி மாற்றி உள்ளார், நீதிமன்ற தீர்ப்புகளை வைத்து கொண்டு அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி அபகரித்து கொண்டுள்ளார், நீதிமன்றம் ஒரு கட்சிக்கு தலைவனை கொண்டு வர முடியாது, 2017-ல் அதிமுக தொடர்பாக சசிகலா வழக்கு ஆமை வேகத்தில் உள்ளது, எடப்பாடி பழனிச்சாமியை நீதிமன்றம் அங்கீகரித்த உள்ளது. ஆனால் மக்கள் மன்றம் அங்கீகரிக்கப்படவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்காத ஒரு கோடி வாக்காளர்கள் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வத்தை தகாத வார்த்தைகளால் பேசி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமியை திமுக தலைமையிலான அரசு 3 ஆண்டுகளாக பொத்தி பாதுகாத்து வருகிறது, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான அனைத்து வழக்குகளும் தற்போது தூங்குகிறது. திமுகவின் பி டீம் எடப்பாடி பழனிச்சாமி, 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறவே அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகியது, விஷசெடிக்கு இரண்டரை ஆண்டுகளாக பாஜக அரசு உரம் போட்டு வளர்த்தது.
எடப்பாடி பழனிச்சாமி ஓ.பி.எஸ் குறித்து பேசுவதற்கு அருகதையற்றவர். ஜெயலலிதாவின் ஜீவ நாடி திமுக எதிர்ப்பு தான். தற்காலிக தீர்ப்பினால் அதிமுக அலுவலகத்த்திற்கு ஓ.பி.எஸ் செல்லவில்லை. ஓ.பி.எஸின் கருத்தை கேட்டு இருந்தால் இன்று அதிமுக மீது ஊழல் வழக்குகள் வந்திருக்காது. ஓ.பி.எஸின் கருத்துக்களை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொள்ளவில்லை, நீதிமன்ற தீர்ப்பால் அதிமுக வேஷ்டிக்கு பதிலாக காவி வேஷ்டி கட்ட வேண்டிய நிலை வந்துள்ளது. காவி வேஷ்டி கட்டி வரும் ஒ.பி.எஸ்சை பார்த்து அதிமுக தொண்டர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள், விஷம் குடித்து செத்தாலும் சாவோம்.
மன்னிப்பு கடிதம் கொடுத்து எடப்பாடி பழனிச்சாமி பக்கம் செல்ல மாட்டோம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டணி அமையும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி இல்லாத அதிமுக உருவாகும், நீதிமன்ற தீர்ப்பை ஊனமான தீர்ப்பாக பார்க்கிறோம். எந்த தீர்ப்பும் இறுதியானது அல்ல. அரசியல் காலண்டரில் கடைசி பக்கம் என எதுவும் இல்லை, நாடாளுமன்ற தேர்தலில் ஒ.பி.எஸ் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது, பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன, பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக தலைமை கழகம் இறுதி முடிவு எடுக்கப்படும்” எனக் கூறினார்.