"கட்சியை உடைக்க அல்ல.. கட்சியை இணைக்கவே முயற்சி! விஜய்க்கு நன்றி"- லீமா ரோஸ்
அதிமுகவில் ஒருங்கிணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் ஒருங்கிணைவார்கள் என எஸ்.பி.வேலுமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ் தெரிவித்தார்.

தவெக அரசுக்கு அதிமுக ஆதரவளிக்கும் என கூறிய லால்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ் அறிவிப்புக்கு பின் அதிமுக எடப்பாடி அணி, வேலுமணி, சி.வி.சண்முகம் என பிளவு ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து சென்னையிலேயே இருந்த லீமாரோஸ் இன்று கோவை வந்தார். அப்போது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லீமாரோஸ், “தமிழ்நாட்டி மக்களின் முன்னேற்றம் தொகுதி வளர்ச்சிக்காக கூட்டணியில் இணைந்துள்ளோம். புதுமை பெண், தமிழ் புதல்வன், திட்டத்தின் கீழ் உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல்வர் விஜய் கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல சிங்க பெண் என பெண்கள் பாதுகாப்புக்காக இத் திட்டத்தை, பெண்கள் அனைவரும் வரவேற்கிறோம். முந்தைய அரசு வழங்கி வந்த மகளிர் உரிமை தொகையை தொடர்ந்து ஆயிரம் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. நல்லாட்சி மலரும் என நம்புகிறோம். 717 மதுபானக் கடைகள் மூடியது குடும்ப பெண்களுக்கு வரவேற்கதக்கது. இதுவே ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது” என்றார்.
உங்களால் தான் அதிமுகவில் பிளவு ஏற்பட்டதாக விமர்சனம் வருகிறது என்ற கேள்விக்கு, அப்படியெல்லாம் இல்லை, அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைக்க வேலை நடைபெற்று வருகிறது. விரைவில் அனைவரும் ஒருங்கிணைவார்கள். கூட்டணிக்கு ஆதரவு மட்டுமே கொடுத்துள்ளோம் என்றார்.

