"பதவி ஆசை முற்றிவிட்டதா? தவெகவின் ஆசை வார்த்தைகளை நம்பி பொய் பேசுகின்றனர்" - கேபி முனுசாமி

 
vijay kp munusamy

எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக, தொகுதி மக்களைச் சந்தித்து வெற்றி பெற்றவர்களில் சிலர், கழகத்தின் தலைமை எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு எதிராக, ஆளுங்கட்சி தரப்பில் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி, ஆளுங்கட்சி நடத்தும் பொம்மலாட்டத்திற்கு இரையாகி, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளதாக அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி சாடியுள்ளார்.

சினிமாவில் நடித்ததை வைத்துக்கொண்டு..." - விஜய்யை சாடிய கே.பி.முனுசாமி

இதுதொடர்பாக கே.பி.முனுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளே! நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சில சம்பவங்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த லட்சோப லட்ச கழக நிர்வாகிகளான, கோடான கோடி கழக உடன்பிறப்புகளான உங்கள் அனைவரையும் எந்த அளவிற்கு மனவேதனைக்கு ஆளாக்கி உள்ளதோ, அதேபோல் எனக்கும் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த இயக்கத்தால், இரட்டை இலை சின்னத்தால் வாழ்வு பெற்று, இதய தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் ஆசியோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக, தொகுதி மக்களைச் சந்தித்து வெற்றி பெற்றவர்களில் சிலர், கழகத்தின் தலைமை எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு எதிராக, ஆளுங்கட்சி தரப்பில் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி, ஆளுங்கட்சி நடத்தும் பொம்மலாட்டத்திற்கு இரையாகி, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்றக் கட்சித் தலைவராக 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடியார் அவர்களைத் தேர்ந்தெடுத்து, கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இட்ட தங்களின் சொந்த கையெழுத்தை மறுக்கும் அளவிற்கு பதவி ஆசை முற்றிவிட்டதா? இவர்கள் கூறும் பேச்சுக்கே வந்தால், திமுக ஆதரவோடு அமையும் ஆட்சிக்கு ஆதரவாக கையெழுத்து இட்டார்களா ? பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்ல வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களை முதலமைச்சராக்கி, இவர்கள் எல்லாம் அமைச்சர்கள் ஆக திமுக ஒப்புக்கொண்டதாகவும், அதற்கு இவர்களும் ஒப்புக்கொண்டார்களாம். இல்லை எனக்குப் புரியவில்லை. இப்போ அது மட்டும் திமுக ஆதரவு, கூட்டணி எல்லாம் இல்லையா? திமுக முன்னாள் அமைச்சர்கள், இவர்களைத் தொடர்பு கொண்டார்கள் என்று இவர்களே சொல்கிறார்கள் என்றால், அமைச்சராக வேண்டும் என்ற பதவி வெறியில் இவர்கள் தான் திமுக பக்கம் பேசினார்களோ? என்ற சந்தேகம் இப்போது கழக நிர்வாகிகளுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் வர ஆரம்பித்துவிட்டது.

“பாரதிய ஜனதா கட்சி, தமிழக ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் எந்தப் பங்கும் வகிக்கவில்லை” என அவர்கள் தெளிவாகக் கூறிவிட்ட பிறகு, நம்முடைய கூட்டணிக் கட்சி என்றெல்லாம் யோசிக்காமல், இவர்களுடைய அமைச்சர் மோகத்திற்காக, அவர்கள் மீதும் சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்துவிட்டார்களே..? திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தயவோடு, திமுக-வால் கொல்லைப்புறத்தில் இருந்து ஆட்டுவிக்கப்படும் ஒரு கத்துக்குட்டி ஆட்சிக்கு, Voluntary-ஆக சென்று இவர்கள் இவ்வளவு மண்டியிடுவது ஏன்? கழகம் எப்படிப் போனால் என்ன? தொண்டன் எக்கேடாய் போனால் என்ன? தாங்கள் அமைச்சர் பதவி வாங்கி, சகல அதிகாரங்களையும் அனுபவிக்க வேண்டும். அதானே? இப்படிப்பட்ட எண்ணத்தோடு இருப்பவர்கள், வெற்றி தோல்வி பாராமல் மக்களுக்காக உழைக்கும் இந்த இயக்கத்தின் பெயரை உச்சரிக்கக்கூட நா கூச வேண்டும். 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடியார் அவர்கள், கழகப் பொதுச் செயலாளர் ஆவதற்கே அவர்கள் தான் காரணம் என்ற தொனியில் பேசியுள்ளார்கள். மதிப்பிற்குரிய திரு. எடப்பாடியார் அவர்கள் இந்த இயக்கப் பொறுப்பை ஏற்றதற்குப் பின்னால் ஒவ்வொரு தொண்டனின் உழைப்பும் உள்ளது.

இன்றைக்கு கழகத் தலைமையை எதிர்த்துப் பேசுபவர்களும் எங்கள் தம்பிகள் தான். அவர்களைப் போல் கொச்சையாகப் பேசி, கண்ணியம் தவற, ஒரு அண்ணனாக என்னால் முடியாது. “வெற்றி எல்லோருக்குமானது. தோல்வி எனக்கானது” என்பது தான் திரு. எடப்பாடியார் அவர்கள் எப்போதும் கூறுவது. இது அவர்களுக்கும் தெரியும். தேர்தல் பின்னடைவு என்ற சோகத்தின் ஈரம் காய்வதற்குள், இயக்கத்தைப் பிரித்து ஆளுங்கட்சியின் கைப்பாவையாகத் துடிக்கும் இவர்களிடம் நாம் என்ன பேச வேண்டும் என எனக்குத் தெரியவில்லை. சட்டமன்ற நடவடிக்கைகளில் கழகத் தலைமையோடு துணை நின்று, பிறகு கூடும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் இதையெல்லாம் பேசியிருந்தால் அது ஜனநாயகம். அதை விடுத்து, இவர்கள் செய்யும் செயலை என்னவென்று சொல்வது? "பதவிக்கு வரத்தான் அரசியல் செய்வதாக” கூறும் தம்பிகளுக்கு, அறிஞர் அண்ணாவின் வழிநின்று சொல்கிறேன்: "பதவி எனும் தோளில் போடும் துண்டுக்கு ஆசைபட்டு, கழகம் எனும் இடுப்புக்கு கீழ் கட்டும் வேட்டியைக் கழற்றிவிட்டு நிற்காதீர்கள்"! இவர்கள் இப்படி என்றால், இவர்களை ஆசை வார்த்தை கூறி மயக்கி இருக்கும் முதலமைச்சரைப் பார்த்து நான் கேட்கிறேன், நீங்கள் செய்வது மாற்று அரசியலா? மனசாட்சியை அடகுவைத்துவிட்டு செய்யும் அரசியலா? எங்கள் கழகத்தினர், அதாவது இன்று உங்களுக்கு துதிபாடும் அந்த சிலர் எதிர்த்தும், நியாயத்தின் பக்கம் நின்று, கரூர் துயரச் சம்பவத்தின் போது சட்டமன்றம் வரை பேசியவர் கழகப் பொதுச் செயலாளர் திரு. எடப்பாடியார் அவர்கள். அன்றைக்கு அவர் பேசவில்லை என்றால், அன்றைய திமுக அரசு உங்கள் பொதுவாழ்விற்கு முடிவுரை எழுதி இருக்கும். உங்கள் மனசாட்சிக்கு இந்த உண்மை தெரியும் என நம்புகிறேன்.  ஆனால், ஆட்சிக்கு வந்த அடுத்த நொடி நீங்கள் செய்தது என்ன ? எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சித்து, எங்கள் கூட்டணி சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேரம் செய்து ஈர்த்து, மந்திரி மோகம் காட்டி எங்கள் கட்சியினர் மீது மாய வலை வீச முயற்சிக்கிறீர்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சபாநாயகரிடம் எங்கள் கழகப் பொதுச் செயலாளர் அவர்களை சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்து, அதன்படி கொறடா உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை, எங்களுடைய கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் மற்றும் சட்டமன்றப் பேரவை முதன்மைச் செயலாளரிடம் வழங்கியும் அதனைப் பொருட்படுத்தாமல், எங்கள் கழகப் பொதுச் செயலாளரை அவதூறாகப் பேசுகின்ற சட்டமன்ற உறுப்பினர் இல்லத்திற்கு முதலமைச்சர் செல்வது எந்தவிதத்தில் நியாயம்? உங்கள் கட்சிக்காரராக இருக்கும் பேரவைத் தலைவர், உங்களின் இந்த நடவடிக்கை கண்டு Influence ஆகமாட்டாரா? இதெல்லாம் தெரிந்துதான் நீங்கள் இதைச் செய்கிறீர்கள். இப்போது சொல்லுங்கள், நான்காம் தர அரசியல்வாதி போல செயல்படும் நீங்களா தூய சக்தி ? தங்களின் இத்தகைய செயல்களை பொதுமக்கள் விரைவில் தெரிந்துகொள்வார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.