பெரியாரை விமர்சிக்க சீமானுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை- கே.பி.முனுசாமி

பெரியார் குறித்து விமர்சிப்பதற்கே பெரியார் தான் காரணம், பெரியாரை விமர்சிக்க சீமானுக்கு எந்தவித தார்மீக உரிமையுமில்லை என ஒசூரில் அதிமுக கேபி.முனுசாமி பேட்டியளித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, தனியார் மண்டபத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் அடுத்தாண்டு நடைப்பெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கிய பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக துணை பொதுச்செயலாளர்,முன்னாள் அமைச்சர் கேபி.முனுசாமி, “பெரியாரை விமர்சிக்க சீமானுக்கு எந்தவித தார்மீக உரிமையுமில்லை, பெரியாரை விமர்ப்பதற்கே பெரியார் தான் காரணம்.. எங்களை போன்று பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் முன்னேறவும், இன்று பேசவும் பெரியார் தான் காரணம். ஒரு சமூகத்தினரிடம் இருந்த அதிகாரத்தையும், மூடநம்பிக்கையையும் பொதுமக்கள் மத்தியில் கரடுமுரடாக பேசி விழிப்புணர்வை ஏற்ப்படுத்தியவர் பெரியார்.
பெரியாரின் மாணவனாக அண்ணா, பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஆட்சி அதிகாரம் தேவை என்று ஆட்சிக்கு வந்ததும் சட்டமாக்கினார். 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு அடிதளமிட்டவர் பெரியார். சீமானுக்கு பெரியாரை விமர்சிக்க உரிமை இல்லை. அதிமுக யாரைக் கண்டும் பயப்படாது, மிரட்டலுக்கு பணியாது” என்றார்.