அதிமுகவின் கொள்கைகளைதான் விஜய் கூறியுள்ளார்- கடம்பூர் ராஜூ
திமுகவை தவிர வேறு யாருமே அதிமுகவை குறை கூற மாட்டார்கள். ஏனென்றால் எங்களிடம் குறைகள் இல்லை, நிறைகள் தான் உள்ளது அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தமிழகம் திராவிட பூமி. திராவிடத்தை பேசாமல் அரசியல் செய்ய முடியாது. அதனால் 50 ஆண்டுகளை கடந்து இங்கு திராவிடம் மட்டும் தான் ஆட்சி செய்கிறது. தேசிய கட்சிகளுக்கு இங்கு இடமில்லை. இங்கு திராவிடத்தை வைத்து தான் அரசியல் செய்ய முடியும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் பெயர்களை சொல்லாமல் யாராலும் அரசியல் செய்ய முடியாது. இன்றைக்கு புதிதாக கட்சி தொடங்கி உள்ள விஜய்யும் அதையே தான் சொல்லி உள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி செய்கிறது. மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. அவர்கள் மக்கள் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளனரா என்று பார்க்க வேண்டும். அதனால் அவர்களை தான் யாரும் பேச வேண்டியது வரும். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யும் பேசியுள்ளார். அரசியல் ரீதியாக பார்த்தால் கிட்டத்தட்ட அதிமுகவின் கொள்கைகளை தான் விஜய் கூறியுள்ளார். அதிமுகவை குறை சொல்வதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. தமிழக அரசியல் களத்தில் என்றைக்குமே அதிமுகவுக்கு திமுக எதிரி. எனவே, திமுக எங்களை குறை சொல்லவார்கள். மற்ற கட்சிகள் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் எங்களிடம் குறைகள் இல்லை. நிறைகள் தான் உள்ளது.

டி.டி.வி. தினகரனுக்கு அதிமுக பற்றியோ, இரட்டை இலை சின்னம் குறித்தும் பேச தகுதி கிடையாது. அவரை அடையாளம் காட்டியது அதிமுக தான். அவர் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்டது மோசமான செயல். தன்னை வளர்த்த இயக்கத்துக்கு துரோகம் செய்யததால், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியிலும், தேனி நாடாளுமன்ற தொகுதியிலும் மக்கள் நிராகரித்தனர். எனவே, மனசாட்சி ரீதியாக இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நின்றிருக்க கூடாது. தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் முடிவெடுப்பார்” எனக் கூறினார்.

