இந்தியன்-2 திரைப்படத்தால் காவிரி பிரச்சனையை மறந்த ஊடகங்கள்! ஜெயக்குமார் வேதனை

 
jayakumar jayakumar

இன்று‌ எல்லா ஊடகங்களிலும் இந்தியன்-2 பற்றி பேசி கொண்டிருக்கிற இதே வேளையில் கர்நாடக காங்கிரஸ் அரசு தண்ணீர் தர மறுப்பதை பற்றி பேச மறந்துவிட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar

இதுதொடர்பாக ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று‌ எல்லா ஊடகங்களிலும் இந்தியன்-2 பற்றி பேசி கொண்டிருக்கிற இதே வேளையில் கர்நாடக காங்கிரஸ் அரசு தண்ணீர் தர மறுப்பதை பற்றி பேச மறந்துவிட்டோம். காவிரி வெறும் உரிமையோ வெறும் நீர் பிரச்சினையோ அல்ல! பல லட்சக்கணக்கான மனித உயிர்களையும் பல கோடிக்கணக்கான பயிர்களையும் பாதுகாக்கும் முப்பெரும் மண்ணின் முதற்கடவுள் தான் காவிரி! இயற்கையை தங்களுக்கு ஏற்றது போல இழுத்து பிடிக்க துடிக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு! அதனை கண்டிக்க மறுக்கிறது திமுக அரசு! ஸ்டாலின் நட்பை வளர்த்துக் கொள்ள நாட்டை பறிகொடுக்க ஆரம்பித்து விட்டார்.

பேஸ்புக்‌ சென்று இன்ஸ்டாகிராம் வந்ததால் என்னவோ தெரியவில்லை! காவிரி என்றால் என்ன என்பதே இன்றைய இளைஞர்களுக்கு தெரியாமல் போய் விட்டது! திறனற்ற திமுக அரசு காவிரி உரிமை விவகாரத்தில் கவனம் கொள்ளாமல் விளம்பர மோகத்தில் மும்முரமாய் சுழல்கிறது! இதை கேள்வி கேட்கவேண்டிய நம்மையும் பல புதைக்குளிகளுக்குள் தள்ளி புத்தி மழுங்க செய்து வருகிறது. நீர் தானே என்று இன்று விட்டு விட்டால் நாளை சோற்றுக்கும் இதே போல் அண்டை மாநிலத்திடம் கையேந்த வேண்டிய நிலை வரும்! நம் சந்ததிகள் அகதிகளாய் அலைய வேண்டிய நிலையும் வரும்.


அறிவியல் பிறக்கும் முன்னே அதியசங்கள் பல செய்தவர்கள் தமிழர்கள்! தொலைநோக்கோடு காவிரி விவகாரத்தை அனுகி காவிரி‌ மீட்டு உழவனுக்கு உயிர் கொடுக்க மறந்து விட்டால் நாளை நம் மண்ணில் உழவும் இருக்காது! உணவும் இருக்காது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.