"விஜய் வாக்குறுதிகள்... முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்" - ஜெயக்குமார் பதில்
எம்ஜிஆர் பெயரை உச்சரிக்காமல் யாரும் அரசியல் செய்ய முடியாது. யாரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது, எப்போதும் ஒரே எம்ஜிஆர் தான் என விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதில் அளித்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவாகி 1975 ஆம் ஆண்டு வெளியாகி 175 நாட்களையும் கடந்து வெற்றிகரமான சாதனை படைத்த திரைப்படம் இதயக்கனி. தற்போது இந்த திரைப்படம் டிஜிட்டல் வடிவம் பெற்று சென்னை எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கில் திரையிடப்பட்டு 150 நாட்களை எட்டி உள்ளது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று ஆல்பர்ட் திரையரங்கில் இதயக்கனி திரைப்படத்தை எம்.ஜி.ஆரின் ரசிகர்களுடன் கண்டு ரசித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “அண்ணாவை வைத்து வியாபாரம் செய்யும் கட்சியாக திமுக உள்ளது. எம்ஜிஆர் பெயரை உச்சரிக்காமல் யாரும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது. இன்றும் 50 ஆண்டுகள் கழித்தும் எம்ஜிஆரின் திரைப்படம் பொன்முட்டையிடும் வாத்தாக உள்ளது. டிஜிட்டல் முறையில் திரைப்படம் வெளியிட்டு 150 நாட்களாக ஓடுகிறது, என்றால் அதுவே சாதனை. இதயகனி திரைப்படத்தில் எம்ஜிஆர் ஊழலை பற்றி வெளிப்படுத்தி இருப்பார். இந்தத் திரைப்படம் ஜேம்ஸ்பாண்ட் படம் போல் இருக்கும்.

எம்ஜிஆர் அவர்கள் பன்முக தன்மை கொண்ட தலைவர், அவருக்கு நிகர் யாருமில்லை, அதேபோன்று அண்ணாவுக்கு நிகர் அண்ணாதான், ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதா தான் வேறுயாரும் வர முடியாது. அண்ணா வழியில் திமுக நடக்கவில்லை. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று மக்கள் மத்தியில் உரையாற்றும் போது ஆட்சிக்கு வந்தால் எல்லோருக்கும் வீடு கட்டி தரப்படும், கார் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அட்டையில் மீசை ஒட்டாது. முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும், பிறகு பார்க்கலாம்” என்றார்.


