டெல்லி-சென்னை இடையே விமான சேவை இல்லையா? கபடி வீராங்கனைகள் நாளை வரை காத்திருக்க வேண்டுமா?- ஜெயக்குமார்

 
jayakumar

உடலில் காயங்களுடன்‌-மனதில் வேதனைகளுடன் நாளை வரை இரயிலுக்கு காத்திருக்க வேண்டுமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Image


பஞ்சாபில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிடையே நடைபெற்ற கபடிப் போட்டியின்போது  முறைகேடு குறித்து புகார் அளித்த தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வீராங்கனைகள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கட்சியினர் அரசுக்கு வலியுறுத்தினர். இதனையடுத்து பஞ்சாப்பில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாடு கபடி வீராங்கனைகளை பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீராங்கனைகள் டெல்லியில் தங்கவைக்கப்பட்டு நாளை ரயில் மூலம் தமிழ்நாடு திரும்புகின்றனர் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி கூறினார். 


இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “உடலில் காயங்களுடன்‌-மனதில் வேதனைகளுடன் நாளை வரை இரயிலுக்கு காத்திருக்க வேண்டுமா?டெல்லி-சென்னை இடையே விமான சேவை  இல்லையா? இருந்தும் ஏற்பாடு செய்ய மனமில்லையா? கடுமையான தாக்குதலுக்கு பின்னரும் இன்று அவர்களை டெல்லியில் தங்க வைப்பது தவறானது! விசாரணை என்ற பெயரில் பயிற்சியாளர் அழைத்துச் செல்லப்பட்டு‌ துன்புறுத்தப்பட்டுள்ளார். வீராங்கனைகளையும் துன்புறுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக அனைத்து வீராங்கனைகளையும் மீட்டு வந்து இங்கு உயரிய மருத்துவர்களை கொண்டு‌ உரிய மருத்துவம் அளிக்க வேண்டும்‌. விமான பயணத்திற்கான கட்டணத்தை கூட நாங்கள் ஏற்பதற்கு தயாராக இருக்கிறோம்! மீட்பதற்கு அரசு தயாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.