SIR பணி - அதிமுக போராட்டம் அறிவிக்க உள்ளதாக ஜெயக்குமார் பேட்டி
2002-ல் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் 49 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அப்போது ஏன் திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “2002-ல் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் 49 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அப்போது ஏன் திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? உண்மையில் எந்த நோக்கத்திற்காக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை திமுக எதிர்க்கிறது? SIR முக்கியமானது. தகுதியுள்ள அனைவருக்கும் வாக்குரிமை என்பதை அதிமுக வலியுறுத்துகிறது. முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும் என்பதற்காக அதிமுக வரவேற்கிறது. கடந்த முறை SIR நடந்தபோது மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக ஏன் தடுக்கவில்லை?
தேர்தல் ஆணையத்தின் S.I.R பணிகளில் திமுக தலையிட்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் அதிகாரியான குமரகுருபரன் ஒருதலைப்பட்சமாகவும், விதிமுறைகளுக்கு முரணாகவும் செயல்படுகிறார். திமுகவினரின் செயல்பாடுகளால் மாவட்ட ஆட்சியர்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். S.I.R பணிகளில் முறைகேடு செய்தால் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும். மாவட்ட தேர்தல் அதிகாரியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. முறைகேடுகளில் ஈடுபடும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழ்நாட்டில் நியாயமான முறையில் BLOக்கள் SIR பணிகளை செய்யாததை கண்டித்து அதிமுக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தவுள்ளோம்” என்றார்.


