”தேர்தல் யுக்தியாகதான் விஜய் இப்படி செய்கிறார்; இதன்மூலம் வாக்குகளை பெற முடியாது”- ஜெயக்குமார்
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி உயிரிழந்த நாகலாந்து மாநில ஆளுநர் இல கணேசன் அவர்களுக்கு பாஜக சார்பில் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “எல்லாராலும் எம்ஜிஆராக முடியாது. எல்லாராலும் புரட்சித்தலைவி அம்மாவாக மாற முடியாது. உலகத்துக்கே ஒரு புரட்சித் தலைவர், ஒரு புரட்சித் தலைவி , ஒரு பேரறிஞர் அண்ணாதான். வாக்குகள் பெற வேண்டும் என்ற யுக்திக்காக அண்ணா, எம்ஜிஆர் பெயரை விஜய் உபயோகிக்கிறார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக என்ற இயக்கம் கட்சிக்கே அவர் மட்டும்தான் சொந்தக்காரர். அதிமுகவில் இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட கை ஒரு காலமும் வேறு எங்கும் வாக்கு செலுத்த போகாது. எம்ஜிஆர், அம்மா, அண்ணா பெயரை சொல்லாமல் யாராலும் அரசியல் பண்ண முடியாது.
எங்கள் தலைவர் பெயரை ஏற்றுக் கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் அது வாக்குகளாக வராது. அதிமுகவின் இரட்டை இலை வாக்கு என்பது அதிமுகவுக்கு மட்டும்தான் வரும். புரட்சித் தலைவர் சிறைக்கு சென்றுள்ளார், அண்ணாவுடன் பயணித்து பல தியாகங்கள் செய்துள்ளார், கருணாநிதியை முதலமைச்சராகியவர் எம்ஜிஆர் தான். 1967-ல் திமுக மாபெரும் வெற்றி பெற புரட்சி தலைவரின் உழைப்பு பெரிதாக இருந்தது. தியாகம் ,உழைப்பு திரைப்படத்தில் அண்ணாவின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்து மக்கள் ஏற்று இன்றுவரை புரட்சித்தலைவர் எம்ஜிஆரை தெய்வமாக வணங்குகிறார்கள். புரட்சித்தலைவர் படத்தை யார் போட்டாலும் சரி, நாங்கள்தான் புரட்சித்தலைவர் மாதிரி இருக்கிறோம் என சொன்னாலும் சரி, மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அது தேர்தலுக்கான வாக்குப் பெரும் யுக்தி ஆனால் ஒரு காலமும் வாக்கு பெற முடியாது” என்றார்.

