பாஜகவுடன் கூட்டணி... அதிமுகவில் இருந்து நான் விலகுகிறேனா?"- ஜெயக்குமார் பேட்டி

பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை என அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், “பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை. பதவிக்காக யார் வாசல் கதவையும் தட்டியது கிடையாது, பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது. அதிமுகதான் எனது உயிர் மூச்சு. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிமுகவில் இருந்து நான் விலகுகிறேன் என திருமாவளவன் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். இது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான செய்தி.
என்னை அடையாளம் காட்டியது ஜெயலலிதாவும் அதிமுகவும்தான். உயிர்மூச்சு இருக்கும்வரை அதிமுகவில் மட்டும் இருப்பேன். அதிமுகவில் இருந்து விலகுவதாக நான் எப்போது சொன்னேன்? நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்த செய்தியை வேண்டுமென்று சமூக வலைத்தளங்களில் பரப்புகிறார்கள்” என்றார்.