"அமைச்சர் ரகுபதிக்கு மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா?"- ஜெயக்குமார்

உரிமைகளை மத்திய அரசிடம் தாரைவார்த்தது திமுகதான்; மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோது கல்வியை மாநில பட்டியலுக்கு திமுக கொண்டு வந்திருக்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை தலைமைச் செயலகம் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுகவுக்கு முறைவாசல் செய்து வருபவர் அமைச்சர் ரகுபதி, நாங்கள் முதலமைச்சரை விவாதத்திற்கு அழைத்தால் ரகுபதி வருகிறார். ஆட்டை அழைத்தால் குட்டி வருகிறது. இந்த வாரத்தில் கூட ஒரு தேதி குறியுங்கள் எங்களது பொதுச் செயலாளர் தயாராக இருக்கிறார் முதலமைச்சர் நேரடி வாதத்திற்கு தயாரா? குறிப்பாக, தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்தது யார்..? நீட், காவிரி விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் திமுக தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்துள்ளது அது குறித்து விவாதிப்பதற்காக தமிழக முதலமைச்சரை நாங்கள் விவாதத்திற்கு அழைக்கிறோம். கடந்த நான்கு ஆண்டுகளில் 4 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று அரசை நடத்த முடியாத திராணிய அற்ற அரசாக செயல்படுகிறது திமுக...அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நோக்கமே இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. 7.18 விகிதாச்சாரம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இதைத் தவிர்த்து, பால்வரி, வீட்டு வரி, பட்ஜெட்டில் சொத்து வரியை குறையுங்கள் மின்சார கட்டணத்தை குறையுங்கள் அது பொது மக்களுக்கு உபயோகமாக இருக்கும்... அதையெல்லாம் விட்டுவிட்டு ரூ என மாற்றுவதால் அடித்தட்டு மக்களுக்கு என்ன பயன்?
எதிர்க்கட்சித் தலைவரின் சவாலுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லி இருக்கவேண்டும். முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லாமல் அமைச்சர் ரகுபதி ஏன் பதில்சொல்ல வேண்டும்; ரகுபதியை நாங்கள் அழைக்கவில்லை; அமைச்சர் ரகுபதியை அடையாளம் காட்டியதேஅதிமுகதான்; கட்சி கரை வேட்டியை மாற்றாமல் நாங்கள் உள்ளோம். உரிமைகளை மத்திய அரசிடம் தாரைவார்த்தது திமுகதான்; மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோது கல்வியை மாநில பட்டியலுக்கு திமுக கொண்டு வந்திருக்கலாம்; அதிகாரத்தில் இருந்த காலத்தில் எல்லாத்தையும் திமுக தவறவிட்டுவிட்டது. மத்திய அரசுக்கு திமுக அரசு கொத்தடிமையாக உள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் என்று ஒருவர் இருக்கிறாரா? என்றே தெரியவில்லை. மத்திய அரசுக்கு சொம்பு தூக்குவதாகவும், ஒத்து ஊதுவதாகவும் திமுக அரசு செயல்படுகிறது. அமைச்சர் ரகுபதிக்கு மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? விவாதத்திற்கு நாங்க ரெடி? முதலமைச்சர் ரெடியா?” எனக் கேள்வி எழுப்பினார்.