பாஜகவோடு எந்த காலத்திலும் கூட்டணி இல்லை- ஜெயக்குமார்
கட்சியினருக்கு மனக்குறை எதுவாக இருந்தாலும் பொதுச்செயலாளரிடம் முறையிடலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுகவின் புதிய கட்சி அலுவலகத்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அக்கட்டிடத்திற்கு எம்ஜிஆர் ஜெயலலிதா மாளிகை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சூட்டினார். அதோடி கட்டிடம் திறக்கப்பட்டதை இனிப்பு வழங்கி அதிமுகவினர் கொண்டாடினர். இதை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அத்திகடவு அவிநாசி பாராட்ட விழாவை புறக்கணித்த விவகாரம், கோகில இந்திரா உட்கட்சி குறித்து பேசியது உள்பட கட்சியின் தற்போதைய நிலைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஆர்.பி. உதயகுமார், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அத்திக்கடவு அவினாசி கூட்டமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் செங்கோட்டையன் பங்கேற்காதது குறித்த கேள்விக்கு, அத்திக்கடவு அவிநாசி திட்டம் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டம். அந்த திட்டத்திற்கு உண்மையான காரணம் ஜெயலலிதாவும், இ.பி.எஸ்.ம் தான். எல்லா கட்சியையும் சார்ந்த விவசாயிகள் அத்திக்கடவு அவினாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பில் இருக்கிறார்கள். அரசியல் கலப்பு இருக்கக் கூடாது. முழுக்க முழுக்க விவசாயிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி. அதிமுக ஏற்பாடு செய்த நிகழ்ச்சி இல்லை. அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்த கூட்டம் விவசாயிகளால் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் தான் இதை பார்க்க வேண்டும். அரசியல் சார்ந்து பார்க்க கூடாது. பாராட்டு விழா கூட்டம் கட்சி சார்ந்தது இல்லை என்பதால் முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை.

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசியது இன்டோர் மீட்டிங். கட்சியினருக்குள் பேசியது உட்கட்சி விவகாரம். அவருடைய மனக் குறைகள் எதுவாக இருந்தாலும் பொதுச் செயலாளர்தான் தலையிட வேண்டும். அதில் நான் கருத்து கூற விரும்பவில்லை. கட்சியினருக்கு மனக்குறை எதுவாக இருந்தாலும் பொதுச்செயலாளரிடம் முறையிடலாம். பாஜகவுடன் எங்களுக்கு மறைமுக கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. வெட்டு ஒன்னு.. துண்டு ஒன்னு வெட்டு ரண்டு என்பதுதான் எங்களுக்கு தெரியும். எந்தவித மறைமுக கூட்டணியும் யாருடனும் இல்லை என பொதுச் செயலாளர் தெளிவாக ஏற்கனவே கூறிவிட்டார். பாஜகவோடு எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என பொதுச்செயலாளர் ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளார். அந்த நிலைபாடே தொடர்கிறது” என்றார்.


