"கோமியத்தை நீங்கள் வேண்டும் என்றால் குடியுங்கள்"- ஜெயக்குமார்

கோமியத்தை குடிக்க வேண்டும் என்றால் நீங்கள் குடிக்கலாம், அதற்காக அதை மற்றவர்களுக்கு பரப்பிட வேண்டாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
திருவள்ளூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நல திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தவெக தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களை சந்தித்தது நல்ல விசியம். அரசு மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்த திட்டத்தையும் மக்களிடம் கருத்து கேட்காமல் ஏதேச்சதிகாரத்துடன் அரசு இருக்கக் கூடாது.
ஒன்றிய பாஜக அரசு கன்னியாகுமரியில் துறைமுகம் கொண்டு வர முயற்சித்ததாகவும் மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகும் என்பதால் அத்தகைய திட்டத்தை அப்போது அதிமுக ஏற்கவில்லை. சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடுவது மரபு. அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் அதிமுகவுக்கு இல்லை. அன்றைய தினம் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்ததால் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக ஆளுநரும் அரசாங்கமும் நடத்திய நாடகமோ சந்தேகம் எழுந்து உள்ளது.
கள்ளு குடிப்பது உடலுக்கு நல்லது. கள்ளு குடித்த சீமான் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். டிஐஜி வருண் குமாருக்கும் - சீமானும் அவரவருக்கு கடமையும் பொறுப்பும் இருந்து வருவதால் அவைப்படி செயல்பட்டால் நல்லது, இல்லையென்றால் எல்லாருக்கும் பிரச்சனை தான். கோமியத்தை குடிக்க வேண்டும் என்றால் நீங்கள் குடிக்கலாம், அதற்காக அதை மற்றவர்களுக்கு பரப்பிட வேண்டாம்” என்றார்.