கரைவேட்டி கட்டும் தகுதியை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார்- ஜெயக்குமார்

கரைவேட்டி கட்டும் தகுதியை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் ரசாயன தொழிற்சாலை மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுப்புற சூழலையும், சுனாமி குடியிருப்பு மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களையும் காப்பாற்றிட வலியுறுத்தி சட்டசபை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளரும் வடசென்னை தெற்கு, (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர், முன்னாள் தமிழக அமைச்சர் டி. ஜெயக்குமார் தலைமை தாங்கினார். புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தனியார் கெமிக்கல் கம்பெனிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கரைவேட்டி கட்டும் தகுதியை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார். எம்ஜிஆர் மாளிகையை அதிமுகவினர் கோவிலாக கருதுகின்றனர். அங்கு ஓபிஎஸ் குண்டர்களோடு புகுந்து அராஜகம் செய்தார். தொடர்ந்து கட்சி விரோத செயல்களில் இறங்கினார். இப்போது ஐகோர்ட் அதிமுக பெயரையோ, கட்சி கொடி, சின்னத்தை பயன்படுத்துக்கூடாது என தீர்ப்பு அளித்துள்ளது. இதை அதிமுகவினர் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர். கழகத்திற்கு எதிரிகள், துரோகிகளுக்கு இந்த தீர்ப்பு பாடமாக அமைந்துள்ளது. இனி கட்சியின் பெயரை பயன்படுத்தினால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குதான் தொடர வேண்டும். அதிமுக, பாஜக கூட்டணி அமையும் என வாசன் அவர் கருத்தை தெரிவித்துள்ளார். அதிமுகவை பொறுத்தவரை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2 கோடி தொண்டர்களின் மனநிலையை ஏற்று பாஜக கூட்டணியில் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.
வரும் பாராளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை. முடிந்த கதை தொடர்வதில்லை. சசிகலாவும் எங்கள் கொடி, சின்னம், பெயரை பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.