“அமெரிக்காவில் இருந்து வேட்பாளரை இறக்கினாலும் ராயபுரத்தில் நான் தான் வெற்றி பெறுவேன்”- ஜெயக்குமார்
ராயபுரம் தொகுதிக்குட்பட்ட சாமுண்டீஸ்வரி திருக்கோயிலில் வழிபாடு நடத்திய பின் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார், சுப்புராயன் தெரு, சோலையப்பன் தெரு, ஆண்டியப்பன் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், “நான் எம்எல்ஏ ஆக இல்லாவிட்டாலும் கடந்த 5 ஆண்டுகளில் மதம் பார்க்காமல், ஏழை எளிய மக்களின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன். என்னுடைய FB பக்கத்தில் இஸ்லாமியர்கள் நிகழ்வில் நான் கலந்துகொண்டேன், சுபேர் கான் எத்தனை நிகழ்வில் கலந்துகொண்டார் என்பதையும் மக்கள் பார்த்துக்கொள்ளட்டும். இஸ்லாமிய சமூக மக்களுடன் நான் பிண்ணிப் பிணைந்திருக்கிறேன். தோல்வி பயத்தில் நான் இஸ்லாமிய மக்களுக்கு எதிரானவன் போல திமுகவினர் பிரச்சாரம் செய்கின்றனர். வெளியிலிருந்து அழைத்துவரப்பட்டு திமுகவின் ராயபுரம் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சுபேர் கான் மீது திமுகவினரே அதிருப்தியில் இருக்கும் நிலையில், கோயிலில் வைத்த குங்குமத்தை அவர் அகற்றிய வீடியோ மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தோல்வி பயம் காரணமாகவே ஐட்ரீம்ஸ் மூர்த்தி மாற்றப்பட்டிருக்கிறார். அமெரிக்காவில் இருந்து வேட்பாளர்களை இறக்கினாலும் ராயபுரத்தில் நான் வெற்றி பெறுவது உறுதி. இந்த தொகுதியில் எனக்கு எதிராக பல ஜெயகுமார்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். ஆனால் தொகுதி மக்களுக்கு என் அழகான முகம் தெரியாதா? இரட்டை இலை சின்னம் தான் தெரியாதா, தொகுதி மக்கள் எனக்கு தான் வாக்களிப்பார்கள்” என்றார்.



