ஆடு பகை குட்டி உறவா? ஏன் இந்த நாடகம்?- விஜய்க்கு இன்பதுரை கேள்வி
ஆடு பகை குட்டி உறவா? அல்லது, சர்க்காரியா கமிஷன் விசாரணையின் விபரங்களை விஜய் அன்று அறியாதவரா? என அதிமுக எம்பி இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக எம்பி இன்பதுரை தனது எக்ஸ் தளத்தில், “சர்க்காரியா கமிஷன் தொடர்பான சட்டமன்ற நிகழ்வுகளில் விஜய்- திமுக மோதலில் அப்பட்டமான நாடக வாடை வீசுகிறது!சர்க்காரியா கமிஷன் என்பது அதிமுக பொதுச் செயலாளர் #எம்ஜிஆர் அளித்த புகாரின் அடிப்படையில்,அன்றைய மத்திய காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்டு, கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்கு எதிரான புகார்களை விசாரித்தது. கமிஷன் விசாரணைக்கு எடுத்துகொண்ட 28 குற்றச்சாட்டுகளில், மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் அசுர வளர்ச்சி தொடர்பான குற்றச்சாட்டும் ஒன்று. அந்த மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முரசொலி மாறனின் மகன் தயாநிதிமாறன் அழைப்பின் பேரில், 2006 ம் ஆண்டு பொங்கல் தபால்தலை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள டெல்லி வரை சென்று சிறப்பித்தவர் இன்றைய முதல்வர் விஜய்!
அப்படியானால், ஆடு பகை குட்டி உறவா? அல்லது, சர்க்காரியா கமிஷன் விசாரணையின் விபரங்களை விஜய் அன்று அறியாதவரா? மேலும், சட்டமன்றத்தில் விஜய் உறுப்பினர் ஒருவர் “கருணாநிதி” என்று பெயரைக் குறிப்பிட்டுப் பேசியதற்கே அவர் மீது கோபப் பார்வை வீசி, பின்னர் இதே பேரவையில் மன்னிப்பு கேட்டவர் விஜய் — சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டதே கருணாநிதி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக அதிமுக அளித்த புகார்களை விசாரிக்கத்தான் என்பதையும் அவர் தெரியாதவரா? ஆக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் எதற்காக இந்த அரசியல் மோதல்? ஏன் இந்த நாடகம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

