பாஜக கூட்டணியில் இல்லாதது அதிமுகவிற்கு தான் லாபம் - அன்வர் ராஜா பேட்டி

 
anwar

பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்தது அதிமுகவிற்கு லாபம் தான் என அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த போது அவர் கூறியதாவது: பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்தது அதிமுகவிற்கு லாபம் அவர்களோடு கூட்டணி வைத்ததால் வாக்கு இழப்பு ஏற்பட்டதை கடந்த தேர்தல்களில் பார்த்தோம். சிறுபான்மையினர் மட்டுமல்ல பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் மத்திய அரசு பலரின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. அதிமுகவை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் காரணமாகத்தான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். தமிழ்நாட்டிற்கு பாஜக உதவாது. அதோடு கூட்டணி சேர்ந்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். மீண்டும் பாஜகவுடன் கூட்டணிக்கான வாய்ப்பே இல்லை. இந்த முடிவில் இருந்து பின்வாங்க வேண்டியது தேவையோ, அவசியமோ அதிமுகவிற்கு இல்லை.

anwar

பாஜக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியே வந்தவுடன் அதிர்ச்சி அடைந்ததும் பதற்றமடைந்ததும் குழம்பிப்போனதும் திமுகதான். மிகப்பெரிய சேதாரத்திற்கு உள்ளாகப்போவதும் திமுக தானே தவிர, எங்களுக்கு சிறு சேதாரம் கூட இல்லை. சிறுபான்மையினர் வாக்குகளை 100% பெற்றுதான் திமுக கடந்த 2 தேர்தல்களில் வெற்றிபெற்றது. தற்போது நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் முழுமையாக திமுகவிற்கு கிடைக்காது. 40%-ஐ அதிமுக பிரிக்கும். அதுவே திமுகவிற்கு மிகப்பெரிய நஷ்டம் கூட்டணியில் இருந்தபோது கண்ணை மூடிக்கொண்டு நாங்கள் பாஜகவை ஆதரிக்கவில்லை. ஆதரிக்க வேண்டிய இடங்களில் ஆதரித்தோம். எதிர்க்க வேண்டிய இடங்களில் எதிர்த்தோம் என கூறினார்.