5 நிமிடத்தில் பேச்சை முடித்து விடுகிறேன்! யாருமே போகாதீங்க- கெஞ்சிய முன்னாள் அமைச்சர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
முன்னதாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசிக்கொண்டிருந்த போதே பொதுமக்கள் பெரும்பாலானோர் கலைந்து சென்றதால் நாற்காலிகள் வெறிச்சோடின. முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் என அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பாக பொதுமக்களை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலேயே தக்க வைப்பதற்காக இசை கச்சேரி, நடன நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாடல்களை இசைத்தும், எம்.ஜி.ஆர். வேடமிட்ட நபர் கையசைத்தும் இருந்ததை கண்டு ஏராளமான பொதுமக்கள் நாற்காலிகளில் அமர்ந்து ரசித்து கொண்டிருந்தனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச தொடங்கியதும் பொதுமக்கள் கலைந்து செல்ல தொடங்கினர். பொதுமக்கள் திரளாக இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் காலி நாற்காலிகளை பார்த்து பேசும் பரிதாப நிலைக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி தள்ளப்பட்டார். தொடர்ந்து பேசினால் யாருமே அங்கிருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி இன்னும் 5 நிமிடத்தில் பேச்சை முடித்து விடுகிறேன் தாய்மார்களே, நீங்கள் அனைவரும் நலத்திட்ட உதவிகளை வாங்கி செல்ல வேண்டும் என்றார்.
தம்முடைய பேச்சை கேட்காமல் கலைந்து செல்லும் பொதுமக்களை கேட்க வைப்பதற்காக காத்திருந்து நலத்திட்ட உதவிகளை வாங்கி செல்லுங்கள் என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியது நலத்திட்ட உதவிகளை வாங்க வேண்டும் என்பதை நினைவூட்டி என்னுடைய பேச்சை சிறிது நேரம் கேட்டுவிட்டு செல்லுங்கள் என கெஞ்சுவது போல அமைந்தது. நீண்ட நேரம் காலி நாற்காலிகள் முன்னிலையில் பேசி முடித்து பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.