அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது

கரூர் நில மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறி, வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட ஏழு பேர் மீது பதியப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் பதுங்கி இருந்த விஜயபாஸ்கரை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.