கட்சியின் ரத்தத்தை உறிஞ்சி சொத்து சேர்த்துவிட்டு, இபிஎஸ் மீது கொலை பழி சுமத்துவதா? - சசிகலாவுக்கு சாடிய கே.பி.முனுசாமி

 
KP Munusamy

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனிசாமி தமிழக அரசு மற்றும் சசிகலாவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் மகளிருக்கு 2,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், ராம் நகர் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பி பாலகிருஷ்ணா ரெட்டி, திரைப்பட நடிகரும் இயக்குனருமான ரங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள். இதில் சிறப்பு விருந்தினராகப்  பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர், அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனிசாமி, திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். திமுக அரசு 520 வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றிவிட்டது. தேர்தல் பயம் வந்தவுடன் 3 ஆண்டுகள் கழித்து 1,000 ரூபாயை வழங்குகிறார்கள். அதுவும் சட்டமன்ற தேர்தல் வருகிறது என்ற உடனேயே ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அதுவும் வாக்கு வங்கிக்காகவே வழங்கப்பட்டது. வாக்கு வங்கிக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரே முதலமைச்சர் இந்திய துணை கண்டத்தில் முக ஸ்டாலின் மட்டும்தான் என அவர் விமர்சித்தார். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த 2 மாதங்களுக்குள் நிர்வாக நடைமுறைகளை முடித்து, 3-வது மாதமே தகுதியுள்ள அனைத்துச் சகோதரிகளுக்கும் மாதம் 2,000 ரூபாய் உரிமைத் தொகை உறுதியாக வழங்கப்படும் என மேடையில் வாக்குறுதி அளித்தார்.

சசிகலாவின் சமீபத்திய பேச்சுகளுக்குப் பதிலடி கொடுத்த அவர், "அரசியலில் ஈடுபட மாட்டேன் என ஜெயலலிதாவிடம் கடிதம் கொடுத்துவிட்டு மீண்டும் வந்தவர் சசிகலா. கட்சியின் ரத்தத்தை உறிஞ்சி கோடிக்கணக்கான சொத்து சேர்த்த ஒரு குடும்பம், இன்று எடப்பாடியார் மீது கொலை முயற்சிப் பழி சுமத்துவது கடுமையான கண்டனத்திற்குரியது. தர்மம் தன் வேலையைச் செய்ததால்தான் அவர் சிறை செல்ல நேரிட்டது" எனச் சீறினார்.