தலைதூக்கிய பெட்ரோல் குண்டு கலாச்சாரம்- சிறார்கள் ஈடுபடுவது வேதனை: ஜெயக்குமார்

 
jayakumar

செய்யும் தொழிலே தெய்வம் என எண்ணி உழைக்கும் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு அதிர்ச்சியளிக்கிறது.


சென்னை பழையவண்ணாரப்பேட்டையில் காலணி விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் பூட்டியிருந்த அந்த கடை மீது, இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டு வீசி தப்பி சென்றது. கடை பூட்டியிருந்ததால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி பதிவுகளை அடிப்படையாக வைத்து பெட்ரோல் குண்டு வீச்சில் தொடர்புடைய  4 பேரை கைது செய்தனர்.


இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “செய்யும் தொழிலே தெய்வம் என எண்ணி உழைக்கும் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு அதிர்ச்சியளிக்கிறது. எனது சொந்த தொகுதியான இராயபுரத்திற்கு உட்பட்ட வண்ணாரபேட்டையில் சாகுல் ஹமீது என்பவரது கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
இது எந்த அளவிற்கு சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.நம் தொகுதியில் 25 ஆண்டுகளாக இல்லாத பெட்ரோல் குண்டு கலாச்சாரம் தற்போது வந்தது எப்படி? இச்சம்பவத்தில் சிறார்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது தான் வேதனையிலும் வேதனை!” எனக் குறிப்பிட்டுள்ளார்.