டிடிவி தினகரன் திமுகவின் பி-டீம்: ஜெயக்குமார்

 
jayakumar

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பது, பூத் கமிட்டி அமைப்பது,  தேர்தலுக்கு முன்பாக கட்சியில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக ஆளுநரை சந்தித்து புகாரளிக்கவும் முடிவு செய்யப்பட்டது. 

Image

 

இதை தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார், “2024 நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் மக்களிடத்திலே எடுத்துச் சொல்ல வேண்டுமெனவும், 40 தொகுதிகளை கைப்பற்ற வேண்டுமென்ற நிலையில் அதற்கேற்ற வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள், 2கோடி இலக்கையும் தாண்டி உறுப்பினர்களை சேர்த்து அதிமுகவின் வளர்ச்சிக்கு மாவட்ட செயலாளர்கள் செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.தொடர்ந்து, ஆகஸ்ட் 20 மதுரையில் நடைபெற உள்ள மாநாடு, இதுவரை தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் பிரம்மாண்ட மாநாடாக நடத்த பணிகள் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது. 

jayakumar

கள்ளச்சாராயம் எந்த நிலையிலும் கூடாது என்பது அதிமுகவின் நிலைப்பாடு. தற்போதைய ஆட்சி மீது பயம் இல்லை, முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காததும் மரணத்துக்கு காரணம். மரணம் ஏற்பட்டபின் விழித்துக்கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கள்ளச்சாராய விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாக பேசியதன் மூலம் டி.டி.வி தினகரன், திமுகவின் பி-டீம் என்பதை நிரூபித்துள்ளார். கள்ளச்சாராயத்திற்கு 22 பேர் பலியான நிலையில் அதை திசை திருப்பும் வேலைதான் நடைபெறுகிறது. திசை திருப்பும் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் கின்னஸ் சாதனை படைப்பார். தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடும் என கூறிவிட்டு கள்ளாச்சாராய ஆறுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ” என்றார்.