"ஸ்டாலின் நலமோடு இருக்க வேண்டும்; அதிமுக ஆட்சி அமைப்பதை அவர் பார்க்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி

 
ச்

ஸ்டாலின் நலமோடு இருக்க வேண்டும், அதிமுக ஆட்சி அமைப்பதை அவர் பார்க்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

சேலத்தில் அதிமுக வேட்பாளர் பாலாஜி சுகுமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டிற்கு ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கலாம். ஆனால் சேலம் மாவட்டத்தை அதிமுகதான் ஆண்டு கொண்டிருக்கிறது. தொகுதி மறுவரையில் தமிழ்நாட்டில் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது. தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வராது என பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூறியுள்ளனர். தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்குமான தேர்தல் இல்லை, நாம் வெல்லாவிட்டால் தமிழ்நாடு சர்வாதிகாரமாக மாறும். தமிழ்நாட்டில் தானே தேர்தல் நடக்கிறது. எதற்காக மு.க.ஸ்டாலின் டெல்லியை இழுக்கிறார். அவருக்கு இது தான் கடைசி தேர்தல். இருப்பினும் ஸ்டாலின் நலமோடு இருக்க வேண்டும், அதிமுக ஆட்சி அமைப்பதை அவர் பார்க்க வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்தபின்பு அம்மா உணவகம் திட்டம் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும். அதிமுக மக்களுக்கான கட்சி, திமுக குடும்பத்திற்கான கட்சி. கடந்தமுறை திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தபின்பு 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

தேர்தலுக்கு முன்பே ஸ்டாலின் கருப்புச்சட்டை போட ஆரம்பித்துவிட்டார். ஸ்டாலின் அவர்களே மக்கள் நிச்சயமாக உங்களுக்கு கருப்பு சட்டை அடையாளம் கொடுப்பார்கள். தொகுதி மறுவரையறை குறித்து தவறான கருத்தை திமுக பரப்புகிறது. தமிழகத்தில் ட்தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என மத்திய அரசு நேற்றே தெளிவுபடுத்திவிட்டது. தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகள் 59ஆக உயரும். ஸ்டாலின் குடும்பம் மட்டும்தான் வளமாக உள்ளது, மற்றவர்கள் யாரும் வாழமுடியவில்லை. அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கும் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது” என பேசினார்.