“ஒரே பொய்... பக்கம் பக்கமாக விளம்பரம்” - பரப்புரையில் ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்
அதிமுக ஆட்சி இருக்கும்போதே பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்திற்கு வந்துவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திருச்சியில் பிரச்சாரத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, “பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதாக மு.க.ஸ்டாலின் பொய் கூறுகிறார். பக்கம் பக்கமாக திமுக விளம்பரம் கொடுக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு மூல காரணம் அதிமுக. தமிழ்நாட்டின் தற்போதைய இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சிக்கு அதிமுகவின் ஆட்சிதான் காரணம். அதிமுக ஆட்சியின்போது ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகளால்தான் தற்போது இரட்டை இலக்க பொருளாதார வளர்சி ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி இருக்கும்போதே பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்திற்கு வந்துவிட்டது. விவசாயம் திமுக ஆட்சியில் நலிவடைந்துவிட்டது. 5.5% லிருந்து 3.5% குறைந்துவிட்டது. ஆனால் ஸ்டாலின் இதை மறைக்கிறார். தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் திருப்பி 10 முறை விமர்சிக்க எங்களால் முடியும். அதிமுக தொண்டனே உங்களை விமர்சிப்பார். தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவிடம் தொழிற்சாலைகளின் நிலை என்னா? எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது? எவ்வளவு பேருக்கு வேலை கிடைக்கும் என்று கேட்டல் வெள்ளைப் பேப்பரை காட்டுகிறார். ஒண்ணும் செய்யல, அதான் வெள்ளைப் பேப்பரை காட்டுகிறார். திமுக பேசும் பொய்களை விளக்க வேண்டியது எனது கடமை. திருச்சியை அதிமுக கோட்டையாக மாற்ற வேண்டும்” என்றார்.



