"52 லட்சம் லேப்டாப் கொடுத்தோம்! திமுக 20 லட்சம் தான் கொடுத்திருக்காங்க"- எடப்பாடி பழனிசாமி
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகேயுள்ள வாழவந்தான்குப்பம் பகுதியில் அதிமுக மாவட்ட மகளிர் அணி சார்பில் நடைபெற்ற மாபெரும் மகளிர் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சி மகளிர் எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும். அதிமுக ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி கொடுத்தோம். ஸ்டாலின் ஆட்சியில் 20 லட்சம் லேப்டாப்கள் கொடுக்கிறார்கள். அதிமுக ஆட்சியின் போது பொங்கல் பரிசாக ரூ.2500 கொடுத்த போது ரூ.5000 தருமாறு கூறிய ஸ்டாலின் இப்போது அவர் ஆட்சியில் ரூ.3000 தருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. அதிமுக மீண்டும் ஆட்சி அமைந்த பின் அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட அந்த சார் யார் என்று கண்டுபிடிக்கப்படும்” என்றார்.


