"அதிமுக பலம் தெரியாமல் புதிய கட்சி தொடங்கியவர்கள் பேசுகின்றனர்”- ஈபிஎஸ்

 
eps eps

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட வீரகநல்லூரில் அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி  பங்கேற்ற மக்களை காப்போம் தமிழகம் மீட்போம் பிரசார பயணம்   நடைபெற்றது.  அதிமுக அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி  தலைமையில் அதிமுக வினர்  எடப்பாடி பழனிச்சாமிக்கு  உற்சாக வரவேற்பு வழங்கினர். சென்னை பைபாஸ் சாலையில் இருந்து பிரசார கூட்டம் நடைபெற்ற வீரகநல்லூர் வரை சுமார் 10 கிமி தூரத்திற்கு சாலைக்கு இருபுறமும் கொடி கம்பங்கள், அலங்கார வளைவுகள்,  பேனர்கள் வைக்கபட்டது. கூட்டம் நடைபெற்ற   பகுதி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. திருத்தணி தொகுதிக்கு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும் திரளாக அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற  கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு  உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.  

திறந்த  பேருந்தில் இருந்து பேசிய  எடப்பாடி பழனிச்சாமி, “இதுவரை  நடைபெற்ற 177 பிரச்சார கூட்டங்களில் சேர்ந்த கூட்டங்களில் திருத்தணி கூட்டம்  முதல் இடம் பிடிக்கும் அளவுக்கு மக்கள் வெள்ளமாக கூடியுள்ளனர். இருந்தாலும்,  புதிய கட்சி தொடங்கியவர்கள் (தவெக விஜய்)  எல்லம் அதிமுகவை பற்றி பேசுகிறார்கள் வரும் சட்டமன்ற தேர்தலில்  210 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று  ஆட்சி அமைக்கும். திமுக ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்களுக்கு நன்மை கிடைத்ததா என்று சிந்தித்து பாருங்கள்  வாரிசு  அரசியல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள்  வாட வேண்டுமா என்று சிந்தித்து பாருங்கள். நெல் குவிண்டாலுக்கு  ரூ. 2500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் தரப்படும் என்ற திமுக  வாக்குறுதி கொடுத்தார்கள், கொடுத்தார்களா என்று கூட்டத்தில் பங்கேற்றவர்களை பார்த்து கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் போதை பொருட்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  திருத்தணியில்  ரீல்ஸ் மோகத்தில் சிறுவர்கள் வடமாநில வாலிபரை  அரிவாளால்  கடுமையாக  தாக்கியுள்ளனர்.   

புத்தகங்கள் பிடிக்க வேண்டிய கைகள்  போதை பொருட்கள் கட்டுப்படுத்தப்படாத தால், பட்டா கத்தி பிடிக்கும் நிலைக்கு மாணவர்கள் வந்துள்ளனர். இனி இந்த ஆட்சியை நம்புவதை விட நமது குழந்தைகளை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில்  5 லட்சம் கோடி கடன் செய்ததுதான் சாதனை. நீட் ரத்து செய்வோம் என்று   கூறிவிட்டு தற்போது நீட் தேர்வில் விளக்கு வாங்கி தர முடியாது என்று சட்டமன்றத்தில்  முடியாது என்று கூறுகிறார். இதை தான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே தெரிவிக்கிறோம். அதிமுக ஆட்சி அமைந்தால் மீண்டு  மிக்சி, கிரைண்டர், மினி கிளினிக், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வருவோம். ஏழை எளியோருக்கு தளம் போட்ட வீடுகள் கட்டி கொடுப்போம். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் மடிகணினி வழங்கும் திட்டத்தை கொண்டு வருவோம். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை  உள்ளூர் பக்தர்கள்  கட்டணமின்றி சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்” என்றார்.