“கூட்டணி அமைப்பது அந்தந்த கட்சி தலைவர்களின் விருப்பம்"- ஈபிஎஸ்
கிராமம் முதல் நகரம் வரை தரமான தார் சாலை அமைத்துக் கொடுத்த அரசு அதிமுக அரசு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ரகுராம் ராஜன் தலைமையிலான குழு கண்ணை மூடிக்கொண்டு கடன் வாங்க மட்டும் யோசனை தெரிவித்ததா? அந்த குழு அளித்த ஆலோசனைகள் என்ன என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சட்டமன்ற தேர்தல் உஷ்ணத்தை தவிர்க்கவே 5 ஆயிரம் ரூபாயை ஸ்டாலின் அரசு கொடுத்துள்ளது. எங்கள் திட்டத்தின் மீது சவாரி செய்கிறது திமுக. எண்ணத்தை கைவிட்டு, உங்கள் ஆட்சியின் சாதனைகளை கூறி பரப்புரை செய்யுங்கள். அப்படி எதுவுமே இல்லையோ? சரி, தோல்வி அடைய வாழ்த்துகள். ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு ரத்து, 5 லட்சம் காலிப்பணியிடம் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம் போன்ற திமுகவின் வாக்குறுதிகள் என்னாச்சு?
அதிமுக ஆட்சியில் கொரோனாவை தடுப்பதில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. கஜா புயல் முதல் கொரோனா காலம் வரையில் சிறப்பாக செயல்பட்ட அரசு அதிமுக அரசு. இதுநாள் வரை இல்லாத அளவுக்கு வருவாய் பற்றாக்குறை உயர்ந்துள்ளது. நிதிப்பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை எடுப்பது ஆக்கப்பூர்வமான அரசின் கடமையாகும். கிராமம் முதல் நகரம் வரை தரமான தார் சாலை அமைத்துக் கொடுத்த அரசு அதிமுக அரசு. கூட்டணி அமைப்பது அந்தந்த கட்சி தலைவர்களின் விருப்பம்” என்றார்.



