"கரண்ட் தொட்டா தான் ஷாக் அடிக்கும்; இப்போ கரண்ட் பில்ல கேட்டாலே ஷாக் அடிக்குது"- இபிஎஸ்
யாரெல்லாம் உதவி செய்தார்களோ அவர்களிடம் ஆசி வாங்குவோம், சிறு உதவி செய்தால்கூட ஆசி வாங்குவது அதிமுகவின் பண்பு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னையில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக கூட்டணிக்கு மக்களிடம் செல்வாக்கும் பிரகாசமாக உள்ளது. 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே 195 தொகுதிகளில் எழுச்சிப் பயணத்தை நிறைவு செய்துள்ளேன். தேர்தல் அறிவிப்புக்கு பின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பரப்புரை செய்கிறேன். திமுக கூட்டணி கட்சிகளை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை, சந்து, பொந்து, வீதி என அனைத்திலும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. எங்களுக்கு யாரெல்லாம் உதவி செய்தார்களோ அவர்களிடம் ஆசி வாங்குவோம், சிறு உதவி செய்தால்கூட ஆசி வாங்குவது அதிமுகவின் பண்பு. கரண்ட் தொட்டா தான் ஷாக் அடிக்கும்; இப்போ கரண்ட் பில்ல கேட்டாலே ஷாக் அடிக்குது. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் வேளச்சேரி பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். ஆனால், உண்மை என்ன? “ஸ்டாலின் தான் வந்தாரு; நீச்சல் அடிக்க விட்டாரு” என்று ஒரு பெண்மணி சொன்னது தான் உண்மை நிலை. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை சரியில்லாதபோது, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார் என ஆ.ராசா ஆடியோ செய்தி வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த விஷயம் குறித்து விசாரிக்கப்படும். உண்மையாக இருக்கும் பட்சத்தில் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.



