அமித்ஷாவை சந்திக்க மறுக்கும் ஈபிஎஸ்! 50 தொகுதிகள் கொடுக்க முடியாது என அதிமுக திட்டவட்டம்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த அமித் ஷாவை நேற்று இரவு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்தார். அப்போது பா.ஜ.க விற்கு 50 தொகுதிகள் ஒதுக்க வேண்டும், கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி தினகரன் ஆகியோரை சேர்க்க வேண்டும் என அமித்ஷா கூறியதாக தகவல் வெளியானது. மேலும் இன்று எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அமித்ஷாவை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி வராமல் எஸ்பி வேலுமணியே மீண்டும் வந்தார்.

அந்த நேரத்தில் அமித்ஷா கோவில்களுக்கும் மற்றும் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொள்ளவும் சென்றார். சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்த எஸ்பி வேலுமணி அதன் பின் அமித்ஷாவை சந்தித்தார். அவர்களின் சந்திப்பு 1.45 மணி நேரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் மீண்டும் அமித்ஷா பாஜகவிற்கு 50 தொகுதிகள் வழங்க வேண்டும், அதில் 30 க்கும் மேற்பட்ட தொகுதிகள் பாஜக எந்த தொகுதியை கேட்கிறதோ அதைத்தான் வழங்க வேண்டும் என உறுதியாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூட்டணியை பலப்படுத்த உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் அதிமுக தரப்பில் பாஜகவிற்கு 50 தொகுதிகள் வழங்குவதற்கு விருப்பமில்லாமல் உள்ளனர்.
அமித்ஷா உடைய வருகையினால் தேசிய ஜனநாயக கூட்டணி மேலும் வலுவடையும், தொகுதி உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்திக்காததும் அதிக தொகுதிகளை கேட்டு அமித்ஷா கொடுக்கும் அழுத்தத்தாலும் தொகுதி உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது. இதனால் அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தொடர்ந்து கூட்டணியை பலப்படுத்தவும்ம் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிக்கவும் அதிமுக- பாஜக இரண்டு கட்சிகளும் திணறி வருகின்றன. அமித்ஷாவை சந்தித்த பின்பு தனியார் நட்சத்திர விடுதியில் இருந்து வெளியே வந்த எஸ்பி வேலுமணியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் ஏதும் கூறாமல் வேகமாக புறப்பட்டு சென்றார்.


