இதுக்குதான் ஆட்சிக்கு வந்தீர்களோ?- ஈபிஎஸ் சரமாரி கேள்வி
உங்கள் சுயநலத்திற்காக தமிழக உரிமைகளைத் தாரைவார்க்கத் தான் ஆட்சிக்கு வந்தீர்களோ? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், "காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் இரண்டு இடையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம். அதுவும், இந்த இரண்டு மனுக்களை ஒரே வார்த்தையில் “Dismissed” எனக் கூறி தள்ளுபடி செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பதே இன்றைய முதல்வருக்கு தெரியாது என்பதால், Judgement-ல் இருந்து சில பக்கங்களை இணைத்துள்ளேன். இந்த அவமானம் “வெற்றி” மாடல் புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் வரப் போகிறது?
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட மாட்டீர்கள். காங்கிரஸ் கட்சியோடு காவிரி குறித்து பேசமாட்டீர்கள். சட்டப் போராட்டத்தையும் ஒழுங்காக நடத்த மாட்டீர்கள். தமிழ்நாட்டிற்கு நேரெதிராக பேசிவரும் கர்நாடக முதல்வரை ஒரு வார்த்தை கூட கண்டிக்க வக்கில்லாமல், டெல்லியில் அவரோடு போட்டோவுக்கு Pose கொடுக்கிறீர்கள். ஜூன்-12 அன்று மேட்டூர் அணையை திறக்க முடியாமல் ஏற்கனவே குறுவை சாகுபடி வீணாகிப் போனது. தற்போதும் கர்நாடக அரசு தண்ணீரை முழுமையாக வழங்காமல் இருப்பதாலும், நமக்கு உரிமையான நீரைப் பெற வக்கற்ற இங்குள்ள தவெக கூட்டணி அரசாலும், விவசாயிகளுக்கு தண்ணீர் வந்து சேராமல், இந்த கையாலாகாத அரசால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட உள்ளது . விஜய் அவர்களே?
எப்போது பார்த்தாலும் “எனக்கு எதிராக சதி செய்கிறார்கள்” என்று நீலிக்கண்ணீர் வடிப்பீர்களே- உங்கள் ஆச்சரியக்குறி ஆட்சி தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு கொடுத்து வரும் அவமானங்களை எல்லாம் பார்த்தால், “உங்கள் சுயநலத்திற்காக தமிழக உரிமைகளைத் தாரைவார்க்கத் தான் ஆட்சிக்கு வந்தீர்களோ?” என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
முதல்வர் அவர்களே-தமிழகத்தின் ஜீவாதார உரிமையோடு, விவசாய மக்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். புரட்சித் தலைவர் எம்ஜிஆர்,
மாண்புமிகு அம்மா, நான் என தொடர்ந்து அதிமுக கடுமையான, போராட்டங்களுக்கு பிறகு பெற்ற உரிமை இது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே முடக்கி நமது உரிமையை நிலைநாட்டினோம்.
நீர் இன்றி நெல் இல்லை.
நெல் இன்றி குடி இல்லை.
குடி இல்லையேல் கோன் எதற்கு?
என்று கேட்கும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

