“அழிந்துதான் போவார்கள்”- சாபம் விட்ட எடப்பாடி பழனிசாமி
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் எம்.ஜி.ஆர்.-ன் பெயர் நீக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்தும் மறையாமலும், கோடானு கோடி தமிழ் மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து வருபவர் எம்.ஜி.ஆர். கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு, தீய சக்தி தி.மு.க-வினருக்கு எம்ஜிஆர் மீது ஏற்பட்ட வெறுப்புணர்வு இன்றுவரை மறையவில்லை என்பது, தற்போதும் திமுக-வினரது செயல்கள் மூலம் வெளிப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, 1981-ஆம் ஆண்டு தமிழுக்கென்று தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவினார். அந்த பல்கலைக்கழகம் இன்று வரை பல தமிழ் அறிஞர்களை உருவாக்கி பெரும்பேறு பெற்று வருகிறது.
பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நோக்கு, போக்கு, செயல் பகுதிகள் உள்ளன. 1981-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பிறந்த நாளில் இந்த பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது என்று உள்ளதே தவிர, அதைத் தோற்றுவித்த புரட்சித் தலைவர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மேலும், அந்த இணையதளத்தில் உள்ள போட்டோ கேலரியில் இருந்த எம்ஜிஆரின் படமும் நீக்கப்பட்டுள்ளதாம். தமிழை மட்டுமே வைத்து பிழைப்பு நடத்தி வந்த முன்னாள் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் பெயரை வெட்கம் இல்லாமல் கழிவறை முதல் காவாங்கரை வரை வைக்கும் அவரது மகன் ஸ்டாலின், எம்ஜிஆர் பெயரை, அவர் துவக்கிய தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கியிருப்பது, ஸ்டாலினுடைய மமதையின் உச்சத்தைக் காட்டுகிறது.

`சீப்பை ஒளித்து வைத்துவிட்டால், கல்யாணத்தை நிறுத்திவிடலாம்’ என்று நினைப்பதுபோல், தமிழ் பல்கலைக்கழக இணையத்தில் இருந்து எம்ஜிஆரின் படத்தை நீக்கிவிட்டால், அவரின் புகழை அழித்துவிடலாம் என்று நினைப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். வாழ்நாள் எல்லாம் தமிழக மக்களின் நலனுக்காகவே உழைத்து, தான் பாடுபட்டு சேர்த்த செல்வங்களையெல்லாம் மக்களுக்கே விட்டுச் சென்ற எம்ஜிஆருக்கு மக்களே கோயில் கட்டி வழிபடுகிறார்கள். அரசியலைப் பயன்படுத்தி, ஊழல் செய்து பல தலைமுறைக்கு சொத்து சேர்த்த கருணாநிதி குடும்பத்தின் வஞ்சக நெஞ்சமும், நரித்தனமும் ஏற்கத்தக்கதல்ல. எம்ஜிஆரின் புகழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்பது நிதர்சனம். இதுபோன்ற வன்மத்தை கைவிட்டுவிட்டு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணையத்தில் எம்ஜிஆர் படத்தை உடனடியாக பதிவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். கருணாநிதியின் மொத்த குடும்பத்தையே வாழவைத்த எம்ஜிஆரின் புகழை அழிக்க நினைக்கும் ஸ்டாலினுக்கு, தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


