"அதிமுக ஆட்சிக்கு வந்தால் தீபாவளிக்கு பட்டுசேலை, பல லட்சத்துக்கு வீடு கட்டித்தரப்படும்"- எடப்பாடி பழனிசாமி
வீடுகளுக்கு 100% வீட்டு வரி உயர்வு, கடைகளுக்கு 150% வரி உயர்வு. குடிநீர் வரி உயர்வு. குப்பைக்கும் வரி விதித்துள்ளனர். இதுதான் இந்த திமுக அரசின் சாதனை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்றத் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “வைகை அணையை தூர்வார வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளீர்கள். அதிமுக ஆட்சி அமைந்தது, அதை செய்வோம். சட்டம் ஒழுங்கு இன்று தமிழகத்தில் சீர்குழைந்துள்ளது. சிறுமிக்கும் பாதுகாப்பு இல்லை, பாட்டிக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை போதைப்பொருள் விற்பனை அதிகம் நடக்கிறது. சட்டமன்றத்தில், ஊடகங்களில் நான் எச்சரித்த போது, அதை அரசு கண்டுக்கொள்ளவில்லை. இன்று மாணவர்கள், இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. ஒரே 5 ஆண்டில் 2 முறை விவசாய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தது அதிமுக அரசு. 2016ல் அம்மா அவர்கள் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார். கொரோனா காலத்தில், 12,000 கோடி விவசாய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தேன். விவசாயிகளுக்கு வரட்சி நிவாரணம் தந்தோம்.
கிராமப் பகுதி மக்களுக்காக அம்மா மினி கிளீனிக் கொண்டுவந்தோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், இந்த திட்டத்தை திமுக அரசு ரத்து செய்துள்ளது. அடுத்த ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும், ஏழை மக்களுக்காக 4000 அம்மா மினி கிளீனிக் கொண்டுவருவோம். தாலிக்கு தங்கம் திட்டத்தில் என்ன பிரச்சனை என தெரியவில்லை. ஏழை குடும்பப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் தரப்பட்டது. அதையும் நிறுத்திவிட்டனர். அதிமுக ஆட்சி அமைந்த உடன், தாலிக்கு தங்கம் திட்டம் தொடரும். திமுக தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகள் வெளியிட்டனர். அதில் 98% அறிவிப்புகளை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார்.
100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்றார்கள். ஆனால் அதை செய்யவில்லை. கிராமத்தில் வாழும் பல மக்கள் குடிசையில் வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் பலர் குடிசையில் வாழ்கின்றனர். அவர்களுக்கு அரசாங்கமே இடம் வாங்கி, கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கும். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கான்கிரீட் வீட்டை கட்டித்தருவோம். ஒவ்வொரு தீபாவளியின் போதும், பெண்களுக்கு விலையில்லா தரமான பட்டு சேலைகள் வழங்கப்படும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 46 பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார் ஸ்டாலின். 4 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? இந்த பிரச்சனைகளை கண்டுபிடித்தது தான் அவரின் சாதனை. தமிழகத்தில் இன்று 67% மின் கட்டணம் உயர்த்திவிட்டனர். கடைகளுக்கு இரட்டை கட்டணம். வீடுகளுக்கு 100% வீட்டு வரி உயர்வு, கடைகளுக்கு 150% வரி உயர்வு. குடிநீர் வரி உயர்வு. குப்பைக்கும் வரி விதித்துள்ளனர். இதுதான் இந்த திமுக அரசின் சாதனை” என்றார்.


