“இந்த ஆட்சியில் சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை”- எடப்பாடி பழனிசாமி
தென்காசி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “தென்காசி பகுதியில் வேளாண்மை தான் முதன்மையான தொழில். அதிமுக ஆட்சியில் வேளாண்மை செழிக்க பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தோம். 2016-21 வரை 2 முறை விவசாய பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 24 மணி நேரம், மும்முனை மின்சாரம் வழங்கினோம். குடிமராமத்து பணி மூலம் விவசாயிகளுக்கு உதவினோம். பயிர் காப்பீட்டு திட்டங்களில் விவசாயிகளை இணைத்து, பயிர்கள் சேதமடையும் போது விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத் தந்தது அதிமுக அரசு. வறட்சி நிவாரண தொகையையும் அதிமுக அரசு தான் தந்தது. விவசாய தொழிலாளர்களுக்காக பசுமை வீடுகள், விலையில்லா ஆடுகள், மாடுகள், கோழிகள் கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவி செய்தோம். இப்படி ஒரு திட்டத்தை இந்த திமுக அரசு கொண்டுவந்ததா? இந்த ஆட்சியில் சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை.
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த சட்டமன்றத்தில் கேட்டுக்கொண்டோம். பத்திரிக்கை, ஊடகங்கள் வாயிலாகவும், அறிக்கைகள் வாயிலாகவும் கேட்டோம். ஆனால் அதை திமுக அரசு கண்டுக்கொள்ளவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கல்வியில் அதிமுக ஆட்சியில் மிகப்பெரிய சாதனை படைத்தோம். கல்லூரிகள் அதிகம் திறக்கப்பட்டன. 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை கொண்டுவந்தோம் அம்மா இருந்தபோது 7 மருத்துவக் கல்லூரிகளை சேர்த்து 17 கல்லூரிகள் கொண்டுவந்தோம். இந்தியாவிலேயே தமிழகம் தான் அதிகளவில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கொண்ட மாநிலமாக உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணிணி கொடுத்தோம். அதை நிறுத்திவிட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும், லேப்டாப் தரும் திட்டம் தொடரும். அம்மா மினி கிளீனிக் என்று ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் ஆகியோரை நியமித்தோம். ஏழை, எளிய மக்கள் பயன்படுத்த இதை தொடங்கினோம். அதையும் காழ்ப்புணர்ச்சி காரணமாக மூடிவிட்டனர். அதிமுக ஆட்சி அமைந்ததும் 4,000 அம்மா மினி கிளீனிக் தொடங்குவோம். 016-2021 வரை 256 ஆரம்ப சுகாதார நிலையங்களை கொண்டுவந்தோம். ஏற்கனவே இருந்த 158 ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தியும் கொடுத்தோம். ஆனால் இன்றைக்கு ஒரு பெயரை வைத்துவிட்டு, கடைசியில் அந்த திட்டத்தை கைவிட்டுச் செல்லும் அரசாக திமுக அரசு உள்ளது” என்றார்.


