“பாஜகவை 15 நாட்களில் மறந்துவிட்டு காங்கிரஸோடு திமுக கூட்டணி”- எடப்பாடி பழனிசாமி
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மக்களோடு ஒருவராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் உள்ளனர்.
சுற்றுப்பயணத்தின்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , “அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததும் முதல்வர் ஸ்டாலினுக்கு நடுக்கம் வந்துவிட்டது. நாங்கள் யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். இது எங்கள் கட்சி. ஆட்சி பறிபோய்விடும் என்கிற அச்சத்தால், பாஜக உடன் ஏன் கூட்டணி என கேட்கிறார் ஸ்டாலின். 1999ல் வாஜ்பாய் ஆட்சியில் பாஜகவோடு கூட்டணி வைத்தது திமுக. முரசொலி மாறன் மருத்துவமனையில் இருந்தாலும் பரவாயில்லை என, அவரை கேபினட் அமைச்சராக வைத்து அழகு பார்த்தது பாஜக. அந்த பாஜகவை 15 நாட்களில் மறந்துவிட்டு காங்கிரஸோடு கூட்டணி வைத்துவிட்டனர். கனிமொழி ஒரு கூட்டத்தில் பேசும்போது, அங்கு பாதுகாப்பில் இருந்த பெண் காவலர்களிடம் பாலியல் சீண்டலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. பாட்டி முதல் சிறுமிகள் வரை பாதுகாப்பின்றி உள்ளனர். தமிழகத்திற்கு மத்தியில் இருப்பவர்கள் நிதி தருவதில்லை என்கிறார் ஸ்டாலின். 16 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக, அப்போது ஏன் நிதியை பெற்றுக் கொண்டுவந்து மக்களுக்கு எதுவும் செய்யவில்லை? குடும்பத்திற்கு எனில் எதையும் செய்வார்கள்
அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்று திமுகவின் கூட்டணிக் கட்சியினர் சொல்கின்றன. இப்ப இங்க இருக்குற பாஜகவினர் எங்களை விழுங்கிவிட்டார்களா? மூன்று முறை தொடர்ந்து வென்று நாட்டை ஆண்டு வருகிறது பாஜக. பிரதமர் மோடியை உலகமே புகழ்கிறது. இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. எப்போது இந்த ஆட்சி அகற்றப்படும் என மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில், திமுகவை வீழ்த்தி, அதிமுக - பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்று, அதிமுக ஆட்சியமைக்கும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒரே கொள்கையுடைய கட்சிகள் என்கிறார் ஸ்டாலின். அப்ப எல்லா கட்சிகளையும் திமுகவில் இணைத்துவிடலாமே? ஏன் தனியே கட்சி நடத்துகிறார்கள். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் தருவது அதிமுக மட்டுமே” என்றார்.


