"31 கூட்டத்தில் பேசி தொண்டையெல்லாம் புண்ணாகிவிட்டது"- எடப்பாடி பழனிசாமி வேதனை
மின் கட்டணம் உயர்வால் தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய தொழில்கள் மின் கட்டணம் குறைவான உள்ள மாநிலத்திற்கு சென்று விட்டது என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள காமராஜர் சிலை அருகே அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தின் மூலம் பரப்பரை மேற்கொண்டார். ஆலங்குடிக்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ட்ரோன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு மலர் தூவப்பட்டது. பின்னர் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “உங்களுடன் ஸ்டாலின் இதுவரை யாருடன் இருந்தார் என்று தெரியவில்லை, தற்பொழுது தான் மக்களுடன் வந்துள்ளார். யார் இந்த ஐடியாவை கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அந்த ஐடியா படி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. நான்காண்டு காலம் அவர்தான் முதலமைச்சர் என்ன செய்து கொண்டு இருந்தார். 46 பிரச்சனைகள் இருக்கிறது. முதலமைச்சருக்கும் தெரிந்துள்ளது, அரசாங்கத்திற்கும் தெரிந்துள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ளதால் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற தந்திரமாக ஒரு நாடகத்தை அரங்கேற்றி வாக்குகளை பெற உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் உஷாராக இருக்க வேண்டும் இது சாதாரண விஷயம் அல்ல மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் திமுகவினர்.
எப்படி கட்டுமான பொருட்களின் விலை இந்த ஆட்சியில் உயர்ந்தது என்று தெரியவில்லை. எல்லாத்திலும் கமிஷன் இல்லாததே கிடையாது. கமிஷன் வாங்குவதால் தான் இந்த அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. 31 கூட்டத்தில் பேசி தொண்டையெல்லாம் புண்ணாகிவிட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுக கொண்டு வந்த காவிரி வைகை குண்டார் இணைப்பு திட்டத்தை திமுக அரசு முடக்கி உள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான நீர் வரக்கூடிய நிலையில் அந்த நீர் கடலில் கலக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் புதுக்கோட்டை புல்லட் 5 மாவட்டங்களில் மஞ்சள் கரும்பு வாழை உள்ளிட்ட பணப்பயிர்கள் அதிக அளவு விளைந்திருக்கும். அதனால் மீண்டும் அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். ஜல்லிக்கட்டு போட்டி இங்கு தான் அதிகமாக நடக்கிறது. இளம் வீரர்கள் காளையை அடக்கக்கூடிய காட்சி தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளே வியந்து பார்க்கிறது. அதிமுக ஆட்சிக்கு வரும்பொழுது ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்” என்றார்.


