அதிமுக ஆட்சிக்கு வந்தால் தீபாவளிக்கு சேலை, பொங்கலுக்கு ரூ.2,500 பரிசு- எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பரிசாக குடும்பத்துக்கு ரூ.2,500 வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தஞ்சாவூர் ஒரத்தநாடு தொகுதியில் சுற்றுப்பயணத்தின்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “உறுப்பினர் சேர்க்கைக்கு வீடு வீடாக பிச்சை எடுக்கும் கட்சி திமுகதான். அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பரிசாக குடும்பத்துக்கு ரூ.2,500 வழங்கப்படும். தீபாவளி பண்டிகையில் பெண்களுக்கு தரமான சேலை வழங்கப்படும். 2002ல் நடந்த குடியரசு தலைவர் தேர்தலில் அப்துல் கலாமிற்கு வாக்களிக்காமல், அவரை எதிர்த்து நின்றவருக்கு வாக்களித்தது திமுக. கோயில் நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு நிலத்தை சொந்தமாக்க நடவடிக்கை எடுப்போம். நிலம் தந்து ஏழைகளுக்கு அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும்.
காவிரிக்காக இந்திய நாடாளுமன்றத்தையே 22 நாள் ஒத்தி வைச்சது அதிமுகவோட திறமை. மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா பாலைவனமாக மாறிவிடும். விவசாயத்தை அழித்தது திமுக அரசு தான். பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே அதிக தொகையை இழப்பீடாக விவசாயிகளுக்கு வாங்கி கொடுத்த ஒரே அரசு அதிமுக. கல்விக்கடன் ரத்து, 100 நாள் வேளை 150 நாளாக மாற்றப்படும், கேஸ் மாணியம் வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை திமுக வழங்கியது, இதனை செய்தார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.


