"ஸ்டாலின் மாடல் அரசு Failure Model அரசாகிவிட்டது, Bye Bye Stalin"- எடப்பாடி பழனிசாமி
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்தத்தோடு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளும் புரட்சித்தமிழர் இன்று ஒரத்தநாடு, பேராவூரணி,பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
ஓரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஓரத்தநாடு பகுதி விவசாய தொழில் நிறைந்த தொகுதி. கண்ணை இமை காப்பது போல, விவசாயிகளை அதிமுக காப்பாற்றும். விவசாய தொழிலாளிகளின் கஷ்டத்தை நான் நன்கு அறிவேன். பயிர்க்கடன்களை 2 முறை அதிமுக அரசு தள்ளுபடி செய்தது. குடிமராமத்து திட்டம் கொண்டுவந்தோம். விவசாயிகளுக்காக விலையில்லா ஆடுகள், மாடுகள், கோழிகள் வழங்கினோம். கோவில் நிலத்தில் வசித்து வரும் ஏழைகளுக்கு, அதே நிலத்திற்கு பட்டா வழங்கியது அதிமுக அரசு. நீதிமன்றத்தில் அதற்கு தடை பெற்றுவிட்டனர். மீண்டும் அதை நாங்கள் செயல்படுத்துவோம். இளம் விவசாயிகளுக்கு உதவ உழவன் செயலியை கொண்டுவந்தோம். விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை, நேரடியாக நெல் கொள்முதல் நிலையம் மூலம் அரசே கொள்முதல் செய்தது. இன்று நெற்பயிர்களை மழையில் நனைய வைத்துள்ளது திமுக அரசு. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கினோம். பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளை இணைத்தோம். இந்தியாவிலேயே அதிகமாக பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அதிக நிதி பெற்றுத் தந்தது அதிமுக அரசு. 12,000 கோடி பெற்றுத் தந்தோம். உடலுக்கு உயிர் எப்படியோ, அதுபோல விவசாயத்துக்கு உயிர் நீர். தண்ணீர் வீணாக போவதை தடுக்க, தடுப்பணைகள் கட்டினோம். கடந்த ஆட்சியில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க கையெழுத்திட்டவர் ஸ்டாலின். நாங்கள் இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கினோம்.
இண்டி கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கிறது. ஒற்றுமையா இருக்கா இண்டி கூட்டணி? கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, கர்நாடகாவில் மேகதாட்டு அணை கட்டுவோம் என்கிறார். நீங்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் பேசி இதற்கு தீர்வு காணலாமே? காவிரி நதிநீர் விவகாரத்திற்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கியது அதிமுக. இன்றைக்கு பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால், திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பயம் வந்துவிட்டது. அதனால் தான் உளறிக்கொண்டு இருக்கிறார்கள். கர்நாடக துணை முதல்வர் மேகதாட்டு அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கிவிட்டதாக சொல்கிறார். உங்களின் 39 எம்.பிக்கள நாடாளுமன்றத்தில் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்கள்? குடும்பத்திற்கு ஒன்று எனில், உடனே டில்லிக்கு ஓடுவார்கள். அதிமுக - பாஜக கூட்டணி. பலமான கூட்டணி. வெற்றிக் கூட்டணி. இந்த கூட்டணி பெரும் வெற்றியை பெறும். அதிமுக தனிப் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும். ஸ்டாலின் மாடல் அரசு Failure Model அரசாகிவிட்டது. Bye Bye Stalin. கூட்டணிக்கு நான் பலரை அழைத்து, யாரும் எங்களுடன் வரவில்லை என்கிறார் துரைமுருகன். திமுக கூட்டணியை முதலில் கவனியுங்கள். அதிமுக கூட்டணி ISI முத்திரை குத்தப்பட்ட கூட்டணி. அதற்கென தனி மரியாதை உண்டு. உங்கள் கூட்டணியில் ஏகப்பட்ட முரண்கள் உள்ளன. திமுக ஆட்சிக்கு வந்ததும் விலைவாசி உயர்ந்துவிட்டது. அரிசி விலை, பருப்பு விலை, எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது. கட்டுமான பொருட்களின் விலைகளும் உயர்ந்துவிட்டன. பொதுமக்களின் அன்றாட தேவைக்கான பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டன. அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆக வேண்டும் என்கிற அவர்களின் கனவை நினைவாக்க, 7.5% உள் ஒதுக்கீட்டை சட்டமாக்கினேன். இன்று 2,818 ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள். அவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது” என பேசினார்.


