“என் வாழ்வாதரமே விவசாயம் தான்... விவசாயம் என்றாலே முதல்வர் ஸ்டாலினுக்கு கசக்கிறது”- எடப்பாடி பழனிசாமி
ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்திற்கு திமுக அரசு ஒப்பந்தம் போட்டது. அதிமுக அரசு இதை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மன்னார்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “விவசாயம் என்றாலே முதல்வர் ஸ்டாலினுக்கு கசக்கிறது. விவசாய தொழிலாளர்களுக்கு பசுமை வீடு கட்டிக் கொடுத்தோம். விலையில்லா ஆடுகள், மாடுகள் கொடுத்தோம். உழவர் பாதுகாப்பு திட்டத்தை ஏற்படுத்தினோம். 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்கினோம். விவசாயிகளின் பம்ப் செட்களுக்கு மும்முனை மின்சாரம் வழங்கியிருந்தோம். அதுவும் இப்போது நிறுத்தியுள்ளனர். இங்கு தங்கியிருந்தேன். அடிக்கட்டி மின்வெட்டு ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தாலே, மின்வெட்டும் சேர்ந்தே வந்துவிடுகிறது. இந்த ஆட்சி தேவையா? விவசாயிகளை பயிர்க்காப்பீட்டுத் திட்டத்திலும் சேர்க்க தவறிவிட்டனர். 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு வழங்காமல் உள்ளனர். கஜா உட்பட பல்வேறு புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏற்றவாறு நிவாரம் வழங்கியது அதிமுக அரசு. நானும் டெல்டாக்காரன் என்று கூறி, மேட்டூரில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார் ஸ்டாலின். ஆனால் அறுவடை செய்யும் நேரத்தில் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. கர்நாடக அரசிடம் போராடி தண்ணீரை பெற்றிருக்க வேண்டும். அந்த திராணி ஸ்டாலினுக்கு இல்லை. ஏரி, குளங்கள் இங்கு அதிகம் உள்ளன. மழை நீரை தேக்குவதற்கு குடிமராமத்து திட்டத்தை கொண்டுவந்து, ஏரி, குளங்களை தூர்வாரி, அங்கிருந்த வண்டல் மண்ணை இலவசமாக விவசாயத்திற்கு பயன்படுத்த அனுமதித்தோம். இந்த ஆட்சியில் அதையும் நிறுத்திவிட்டனர். அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டு 1 மாதம் ஆகிறது. இன்னும் கடைமடைக்கு தண்ணீர் போய் சேரவில்லை. விவசாயிகள் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை என்று விவசாயிகள் வருந்துகின்றனர்.
முறையாக தூர்வாரியிருந்தால், இந்த நிலையை தவிர்த்திருக்கலாம். அதிமுக ஆட்சியில் விவசாய பயிர்க்கடன்களை 2 முறை தள்ளுபடி செய்தோம். இன்று விவசாயிகள் பயிர்க்கடன் கேட்டால், வங்கிகளின் கடன் கொடுக்க மறுக்கிறார்கள். இப்போது சிபில் ஸ்கோர் என்கிற நடைமுறையை கொண்டுவந்துள்ளனர். இதை தட்டிக்கேட்காமல் உள்ளது திமுக அரசு. சுரங்க விரிவாக்கத்திற்காக வடசேரி பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க முயற்சி நடந்தது. ஆனால் அதிமுக ஏற்கனவே இதை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததால், அங்குள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. வடசேரி பகுதி டி.ஆர் பாலுவின் பகுதி. விவசாய நிலங்கள் நிறைந்த தொகுதி இது. என் வாழ்வாதரமே விவசாயம் தான். அப்படிப்பட்ட விவசாயத்தை பாதுகாத்தது அதிமுக. ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்திற்கு திமுக அரசு ஒப்பந்தம் போட்டது. அதிமுக அரசு இதை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது” என்றார்.


