”திமுக செய்யும் தவறுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜால்ரா போடுவது வெட்கக்கேடு”- எடப்பாடி பழனிசாமி

 
eps eps

திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Image

பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சி திமுகவிற்கு ஜால்ரா போட்டுக்கொண்டு இருக்கிறது. அதனை நினைக்கும்போதே வெட்கமாக இருக்கிறது. இன்று திமுக செய்யும் தவறுகளுக்கெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிகள் உடந்தையாக இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிக்கென்று தனித்தன்மை இருக்கிறது. மக்கள் பாதிக்கப்பட்டால் உடனே கொடிப்பிடித்து போராடக்கூடிய கட்சி. இன்று திமுகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டனர். பாஜகவோடு எப்படி அதிமுக கூட்டணி வைக்கலாம் என கேட்கிறார் ஸ்டாலின். 1999ல் நீங்க பாஜகவுடன் கூட்டணி வைத்தீர்களே? அப்போது பாஜக மதவாத கட்சி என தெரியாதா? ஓராண்டு மருத்துவமனையில் இருந்த முரசொலி மாறனுக்கு இலாகா இல்லா அமைச்சரவை கொடுத்தபோது இனித்ததா?

இன்று ஒவ்வொரு துறையிலும் லஞ்சம் வாங்கி வைத்துள்ளீர்கள். லஞ்சம், ஊழல் நடக்காத துறையே இல்லை. ஆனால் அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் விருதுகள் வாங்கியிருக்கிறோம். இன்றைக்கு மருத்துவமனைகளில் மருந்தும் இல்லை, டாக்டரும் இல்லை, நர்சும் இல்லை. ஒரு பவுன் தங்கம் இன்று ரூ.70,000. தாலிக்கு தங்கம் திட்டம் மூலம் 1 பவுன் தங்க தாலியோடு, ரூ.50,000 தந்தோம். மாணவர்களுக்கு மடிக்கணிணி கொடுத்தோம். அதையெல்லாம் இன்று நிறுத்திவிட்டனர். நீட் தேர்வை ரத்து செய்வதாக சொன்னார்கள், இன்று என்ன ஆச்சு?

Image

50 ஆண்டு கால காவிரி நீர் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் நல்ல தீர்ப்பை பெற்றுக் கொடுத்தது அதிமுக அரசு. குடிமராமத்து பணி மூலம் ஏரி, குளம், குட்டைகளை தூர்வாரி, தண்ணீரை சேமித்து வைக்க உதவியது அதிமுக அரசு. எனக்கு காவிரி காப்பாளன் என்கிற பட்டத்தை அள்ளிக் கொடுத்த மண் இந்த திருவாரூர் மண். இன்று பருத்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். இங்கு வந்த முதல்வர் ஸ்டாலின், அவர்களை பற்றி கவலைப்படக்கூட இல்லை. விவசாயிகள் கேட்டதும், அதிமுக போராடியது. திருவாரூர் என்று சொன்னாலே, திருவாரூர் தேர் தான் நினைவுக்கு வரும். இந்த பகுதியில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்க இருப்பதாக சொன்னபோது, இந்த பகுதியின் பொன் விளையும் பூமியை பாதுகாக்க, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம்.

இன்று தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்குவது சிரமமாக உள்ளதாக என்னிடம் விவசாயிகள் கூறுகின்றனர். அதிமுக ஆட்சியில் இரு முறை விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு செயல்படுவோம். மும்முனை மின்சாரம் தந்தோம். நானும் டெல்டாக்காரன் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவே இல்லை. இதுதான் இந்த டெல்டா முதல்வரின் லட்சணம். விவசாயிகளை நம்ப வைத்து, அவர்களை ஏமாற்றியுள்ளார். இரு நாட்களுக்கு முன்பு இங்கு பேசும்போது, எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார் என ஸ்டாலின் கேட்டார். இது உங்க மண் தானே? இங்கிருந்தே சவால் விடுகிறேன். ஒரே மேடையில் உங்களுடன் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். என்னுடன் நேரடியாக விவாதிக்க தயாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.