“சிறுமி முதல் பாட்டி வரை... அப்பா அப்பான்னு சொல்றீங்களே எங்க போனீங்க?”- எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
நன்னிலம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், “இங்கு கூடியுள்ள உங்களை எல்லாம் பார்த்தால், இந்த தொகுதி வெற்றித் தொகுதி என்பது உறுதியாகிவிட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 10 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள். சிறுமி முதல் பாட்டி வரை இந்த ஆட்சியில் நிம்மதியாக இல்லை. அப்பா அப்பான்னு சொல்றீங்களே, கும்மிடிப்பூண்டியில அந்த சிறுமி கத்தும்போது எங்க போனீங்க? இன்றைக்கு வரை குற்றவாளியை கூட கண்டுபிடிக்கவில்லை. இந்த ஆட்சி தேவை தானா? அப்பா என்று நீங்கள் சொன்னால், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டாமா?
நன்னிலத்தில் கலைக்கல்லூரி, குடவாசலில் கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, குடிமராமத்து பணிகள் முறையாக செய்யப்பட்டன, முடிகொண்டானில் 20 கோடியில் நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதுபோல உங்களால் பட்டியலிட முடியுமா ஸ்டாலின்?. மக்களின் பிரச்சனைகளை அரசிடம் ஒவ்வொரு முறையும் எடுத்துச்சென்ற இடதுசாரிகள் இயக்கம், இன்று திமுகவிடம் அடமானம் வைக்கப்பட்டு, தேய்ந்துபோய் கிடக்கிறது. நான் பேசக்கூடாது என்று நினைத்தாலும், என்னை இடதுசாரி தலைவர்கள் பேச வைக்கிறார்கள். அதிமுக மட்டும் தான் பருத்தி விலை உயர்வுக்கு குரல் கொடுக்கிறது. இடதுசாரிகள் இன்றைக்கு திமுகவுக்கு ஜால்ரா அடிக்கின்றன. பொதுமக்களுக்கு பிரச்சனை எனில், கொடி பிடித்து போராடுவார்கள். ஆனால் இன்று திமுகவிடம் பணம் பெற்றுக்கொண்டு மௌனமாக உள்ளனர்.
நானும் ஒரு விவசாயி தான். உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்கிற குரலுக்கு ஏற்ப, விவசாயிகளுக்கு பிரச்சனை எனில், அதிமுக உங்களோடு வந்து நிற்கும். இந்தியாவிலேயே 12,000 கோடி பயிர்காப்பீட்டு இழப்பீட்டை தந்தது அதிமுக அரசு. 2006-11ல் தொழில்துறை மந்திரியாக இருந்தபோது இதே பகுதியில் மீத்தேன், ஈத்தேன் திட்டத்தை செயல்படுத்த கையெழுத்து போட்டார் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, இந்த பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம். இங்கு கூடியுள்ள கூட்டத்தை டிவியில் பார்த்துக்கொண்டிருப்பார் ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினிடம் அதிமுக கூட்டணி 210 தொகுதியில் வெல்லும் என்கிறார்களே என கேட்டால், அவரால் பதில் சொல்ல முடியவில்லை. திமுக பரிதாபமான நிலையில் உள்ளது. ” என்றார்.


