அதிமுக மிரட்டப்படவில்லை... பாஜகவுடன் மகிழ்ச்சியோடு தான் கூட்டணி அமைத்தோம்- ஈபிஎஸ்

 
eps eps

சென்னை தியாகராய நகரில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாவட்டச் செயலாளர்கள் டி நகர் சத்யா, விருகை ரவி, ராஜேஷ் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். 

மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் இன்று அதிமுகவை பாஜக மிரட்டி பணிய வைத்ததாக ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்டாலின் அவர்களே இது நாடாளுமன்றத் தேர்தல் அல்ல, சட்டமன்றத் தேர்தல். நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் கூட்டணி வைத்திருந்தால் நீங்கள் சொல்வது பொய்யாக இருந்தாலும் எண்ணி பார்க்கலாம். ஆனால் இப்பொழுது சட்டப்பேரவைத் தேர்தல். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கும் கட்சி பாஜக. அவர்களோடு தான் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். அறிவாலயம் மேல் தளத்தில் ரெய்டு, கீழ்த்தரத்தில் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது. அப்படி மிரட்டப்பட்டு நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. எங்களுக்கு அப்படி நிர்பந்தம் இல்லை. இரண்டு கட்சிகளும் மகிழ்ச்சியோடு அமைத்த கூட்டணி இது. எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.

உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பிறகும் நீங்கள் அந்த அமைச்சரை நீக்கவில்லை. ஆனால் நீங்கள் போட்ட வழக்கில் நிரபராதி என்று நிரூபித்தவன் நான். உங்களுக்கு அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை பார்த்து பயம் வந்துவிட்டது. சட்டப்பேரவையில் முன் வரிசையில் இருக்கும் அமைச்சர்களுக்கு எல்லாம் முகம் தொங்கிவிட்டது. யாருக்கு என்ன பிரச்சனை வரும் என்று அஞ்சி அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பதை சட்டப்பேரவையில் பார்த்தோம். நான்காண்டுகள் நீங்கள் செய்த ஊழலால் அமலாக்கத்துறை, வருமானத்துறை உங்களை விரட்டி விரட்டி கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அதனால் நீங்கள் பயப்படுகிறீர்கள். அதிமுக மிரட்டப்படவில்லை, மகிழ்ச்சியோடு தான் நாங்கள் கூட்டணி அமைத்தோம்.  

ச்

ஒரு அமைச்சர் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததால் ராஜினாமா செய்தார். மற்றொருவர் பெண்களை இழிவாக பேசியதால் நீக்கப்பட்டார். பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் பறிபோய் விட்டதாக பேசுகிறார். அண்மையில் சவுக்கு சங்கருக்கு எப்படி எல்லாம் தொல்லை கொடுத்தார்கள் என்று நாட்டு மக்களுக்கு தெரியும். திமுகவை பற்றி விமர்சனம் செய்ததால் அவர் வீட்டில் மனித கழிவு, சாக்கடை தண்ணீர் கொட்டப்பட்டது. இந்த முதலமைச்சருக்கு பத்திரிக்கை சுதந்திரத்தை பற்றி பேச அருகதை கிடையாது. திமுக என்றால் ஊழல் கட்சி. கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன். அமைச்சர்கள் எல்லாம் இனிமேல் கோட்டைக்கு செல்ல வேண்டாம். தொகுதி தொகுதியாக செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அங்கே சென்று என்ன செய்யப் போகிறீர்கள்? இதுவரை மக்களுக்கு என்ன செய்தீர்கள்? மக்களை ஏமாற்றுவதில் தந்திரம் கொண்டவர்கள் திமுகவினர்.

தேர்தல் வாக்குறுதியாக 525 வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில் இதுவரை 15 சதவீத அறிவிப்புகளை தான் நிறைவேற்றி இருக்கிறார்கள். கவர்ச்சிகரமான, நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை எல்லாம் வெளியிட்டார்கள். ஒருமுறை ஏமாந்து விட்டோம்.. மீண்டும் ஏமாறக்கூடாது. பெரும்பான்மையான அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை. கல்விக்கடன் ரத்து செய்தார்களா? சிலிண்டருக்கு மாதந்தோறும் மானியம் கொடுப்பதாக சொன்னார்கள். கொடுத்தார்களா?  ரேஷன் கடையில் குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக தருவதாக சொன்னார்கள். கொடுத்தார்களா? அரசு நிர்வாகத்தில் 3 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாகவும்.. ஆட்சிக்கு வந்த உடன் நிரப்பப்படும் என்றார்கள். இதுவரை 50000 காலி பணி இடங்கள் தான் நிரப்பப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளில் 40 ஆயிரம் காலி பணியிடங்கள் வந்து விட்டது. 40 ஆயிரம் பணியிடங்களும் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார்கள். இன்னும் 9 மாத ஆட்சிதான் இருக்கிறது. எப்படி நிரப்பப் படும்?

தேர்தல் அறிக்கையில் அதிமுக அதிக கடன் வாங்கியதாகவும். நிதி மேலாண்மை ஏற்படுத்தப்படும். நிபுணர் குழு அமைக்கப்படும் என்று கூறினார். 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். கடன் வாங்க தான் அந்த குழுவை போட்டு உள்ளார்கள். இன்னும் 9 மாதத்தில் 50 ஆயிரம் கோடி கடன் வாங்கி விடுவார்கள். அதன் பிறகு 5 லட்சம் கோடி கடன் வாங்கிய பெருமை இந்த முதலமைச்சரையே சாரும். வருமானமே இல்லாமல் அதிமுக சிறந்த ஆட்சியை கொடுத்தது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு. ஸ்டாலினுக்கு பெரிய பெருமை. கடன் வாங்கி திட்டத்தை நிறைவேற்றினால் யார் வேண்டுமாலும் நிறைவேற்றலாம். கடன் வாங்கினால் திருப்பி கொடுக்க வேண்டும். கடன் வாங்காமல் உழைத்து சம்பாதித்த பணத்தில் வாழுங் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி தான் அதிமுக.  ஒரு பக்கம் கொரோனா, ஒரு பக்கம் திட்டங்கள் என அவ்வளவு செலவு செய்தும் கடன் வாங்கவில்லை” என்றார்.