"டாஸ்மாக் மூலம் ரூ.3,600 கோடி வசூல்"- எடப்பாடி பழனிசாமி
மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி, நிர்வாகிகள் விரும்பும் கூட்டணி நிச்சயமாக அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் என வருடத்திற்கு ரூ.3600 கோடி ஊழல் செய்கிறது திமுக. எவ்வளவு தூரம் ஸ்டாலின் நெருக்கடி கொடுக்கிறாரோ, அவ்வளவு தூரம் அதிமுக வளரும். 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக திமுக விளம்பரம் செய்கிறது. ஆனால், 10 சதவீத வாக்குறுதிகள் கூட செயல்படுத்தப்ப்படவில்லை. கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? குடும்ப ஆட்சிக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும்.
ஜனவரி இறுதியில் இருந்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்வேன். அதேபோல் மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி, நிர்வாகிகள் விரும்பும் கூட்டணி நிச்சயமாக அமையும். இதேதான் நாடாளுமன்ற தேர்தலில் கூறினேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு. 2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும். இறுமாப்புடன் சொல்கிறேன் 200 இடங்களில் திமுகவின் வெற்றி என்பது கனவு , அது நனவாகாது” என்றார்.