பாஜக கூட்டணியைவிட அதிமுக 1% கூடுதலாக ஓட்டுகளை வாங்கியுள்ளது- எடப்பாடி பழனிசாமி

 
பாஜக கூட்டணியைவிட அதிமுக 1% கூடுதலாக ஓட்டுகளை வாங்கியுள்ளது- எடப்பாடி பழனிசாமி

கூட்டணி வரும், போகும், ஆனால் கொள்கை நிலையானது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி வரும், போகும், ஆனால் கொள்கை நிலையானது. இந்தியாவிலேயே உண்மையான உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுக தான். ஒற்றுமை என்பது மிகப்பெரிய  பலம், யானைக்கு பலம் தும்பிக்கை  நமக்கு பலம் நம்பிக்கை. நம்பிக்கை என்பது மிகப்பெரிய ஆயுதம், அந்த நம்பிக்கை இருந்தால் நிச்சயம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றிப்பெறலாம்.


தமிழகத்தில் தனித்து நின்று ஆட்சியை அமைத்த ஒரே கட்சி அதிமுக தான், மக்களவை தேர்தலில் பெரிய கூட்டணி இல்லாமல் 20.50% வாக்குகள் பெற்றோம். பெரிய கூட்டணி அமைத்த திமுக 6.5% வாக்குகளையே பெற்றது. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பச்சை பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி திமுக தான். 2021 தேர்தலில் வெறும் 1.98 லட்சம் வாக்குகளால் தான் வெற்றி வாய்ப்புப் பறிபோனது. பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றிப் பெறவில்லை. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 18.80% ஓட்டு வாங்கியது. தற்போது 18.28% வாக்குகளை பெற்று அரை சதம் குறைவாக ஓட்டுகளை வாங்கியுள்ளது. 2014 ஆம் ஆண்டு 8 தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் வாக்கு சதவீதம் 5.56%, ஆனால் தற்போது 20 தொகுதிகளில் போட்டியிட்டு, 11.24% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. பாஜக கூட்டணியைவிட அதிமுக 1% கூடுதலாக ஓட்டுகளை வாங்கியுள்ளது.  நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் கூடியதாக கூறுகிறார்கள், 2014-ஐ ஒப்பிடும் போது வாக்கு சதவீதம் குறைந்து தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் சரியாக கூட்டணி அமையவில்லை என்று விமர்சனம் எழுந்தது.” எனக் கூறினார்.