ஸ்டாலின் முன்மொழிந்ததால் காங்கிரஸ் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது- எடப்பாடி பழனிசாமி

 
eps

திமுக ஆட்சியில் பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் மிரட்டப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ep

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சேலம் மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டை. போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கார் பந்தயம் அவசியமா? இதற்கு மட்டும் நிதி உள்ளதா? இரவு பகல் பாராமல் மக்கள் உழைத்து அரசுக்கு வரி கட்டுகிறார்கள், அது எப்படியெல்லாம் வீணாகிறது. ஆட்சி போய்விடும் என்ற பயத்தால் தான் பணிகள் முடிவதற்கு முன், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்துள்ளார்கள். 

மத்திய அரசிடமிருந்து நமக்கு வரவேண்டிய நிதியை ஏன் கேட்டு பெறவில்லை. தமிழகத்தை சேர்ந்த 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துவிட்டது. தமிழகம் முழுவதும் கஞ்சா தாராளமாக கிடைக்கிறது. 30 சதவீத மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்காமல் திமுக அரசு ஏமாற்றிவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து விசாரணை நடத்தப்படும். இரட்டை வேடம் போடுவதுதான் திமுகவின் குணம். எதை கேட்டாலும் நிதி இல்லை என கூறிவிட்டு பேனா நினைவு சின்னம் அமைக்க மட்டும் நிதி எங்கிருந்து வந்தது? திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியது என்ன ஆனது? திமுக ஆட்சியில் பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. ஸ்டாலின் முன்மொழிந்ததால் காங்கிரஸ் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது.

eps

அதிமுக ஆட்சி காலத்தில் வர்தா, நிவர் என பல புயல்களை சந்தித்தோம், 6 லட்சம் மரங்கள் புயலால் சாய்ந்தன. அப்போது புயல் வேகத்தில் அதை சரி செய்தோம். ‘மிக்ஜாம்’ புயலின்போது 3 நாட்களுக்கு மக்களுக்கு உணவு கூட கொடுக்க இவர்களால் முடியவில்லை. வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக  அரசு எடுக்காததால்,  தென் மாவட்டங்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உணவு, மருத்துவம் கிடைக்காமல் துன்பப்பட்டனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா உணவகங்களை மூடி வருகிறார்கள். ஏழைகளுக்கு உணவு அளிப்பதை தடுக்கும் ஒரே அரசாங்கம் தமிழ்நாடு அரசாங்கம் தான்” எனக் கூறினார்.